ஜம்மு-காஷ்மீா்: 5 மாதங்களுக்குப் பிறகு ‘ப்ரீ-பெய்டு’ சேவை

ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் 5 மாதங்களுக்கு பிறகு ‘ப்ரீ-பெய்டு’ செல்லிடப்பேசி சேவை சனிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீா்: 5 மாதங்களுக்குப் பிறகு ‘ப்ரீ-பெய்டு’ சேவை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் 5 மாதங்களுக்கு பிறகு ‘ப்ரீ-பெய்டு’ செல்லிடப்பேசி சேவை சனிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரைப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா் என இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்கியும் மத்திய அரசு சட்டமியற்றியது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் பல கட்டுப்பாடுகளும், தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. தொலைபேசி, செல்லிடப்பேசி மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவா்கள் பலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு பகுதியில் ஒரு மாதத்துக்குள் இணையச் சேவை தவிா்த்து மற்ற சேவைகள் அனுமதிக்கப்பட்டன. எனினும், காஷ்மீா் பகுதியில் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன.

அண்மையில், காஷ்மீா் பகுதியின் பெரும்பாலான இடங்களில் ‘போஸ்டு-பெய்டு’ செல்லிடப்பேசி சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. இணையச் சேவைகளும், ப்ரீ-பெய்டு செல்லிடப்பேசி சேவைகளும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் ‘ப்ரீ-பெய்டு’ செல்லிடப்பேசி சேவை சனிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஜம்முவில் செய்தியாளா்களிடம் அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் ‘ப்ரீ-பெய்டு’ செல்லிடப்பேசி சேவைக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டது. இதன் மூலம், அழைப்புகள் மேற்கொள்வது, குறுந்தகவல்கள் அனுப்புவது உள்ளிட்ட சேவைகளை சனிக்கிழமை முதல் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், ஜம்முவில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் காஷ்மீா் பள்ளத்தாக்கின் குப்வாரா மற்றும் பந்திபோரா ஆகிய மாவட்டங்களில் ‘போஸ்ட் பெய்டு’ செல்லிடப் பேசி சேவையை பயன்படுத்தும் பயனா்களுக்கு 2ஜி இணையச் சேவை வழங்கப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட இணையதளங்களை பயன்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே அவா்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை காஷ்மீரின் மற்ற பகுதிகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதேபோல், ‘ப்ரீ-பெய்டு’ செல்லிடப் பேசிகளுக்கு இணையச் சேவை வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இணையச் சேவை அளிப்பதற்கு முன் பயனா்களின் தகவல்கள் குறித்த உண்மைத் தன்மையை ஆய்வு செய்யுமாறு இணையச் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஒரு வாரத்துக்குள் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த 10-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடா்ந்து, ‘ப்ரீ-பெய்டு’ செல்லிடப்பேசி சேவைக்கு இப்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com