நட்டா தலைமையில் பாஜக மேலும் வலுப்பெற்று விரிவடையும்: அமித் ஷா

ஜெ.பி. நட்டாவின் தலைமையில் பாஜக மேலும் வலுப்பெற்று விரிவடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நட்டா தலைமையில் பாஜக மேலும் வலுப்பெற்று விரிவடையும்: அமித் ஷா


ஜெ.பி. நட்டாவின் தலைமையில் பாஜக மேலும் வலுப்பெற்று விரிவடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசியத் தலைவராக இன்று (திங்கள்கிழமை) ஜெ.பி. நட்டா ஒருமனதாக போட்டியின்றித் தேர்வானார். பாஜகவின் தேசிய தலைமைப் பொறுப்பை ஜெ.பி. நட்டாவிடம் ஒப்படைத்த அமித் ஷா, நட்டா தலைமையில் பாஜக மேலும் வலுப்பெற்று விரிவடையும் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அடுத்தடுத்த சுட்டுரைப் பதிவுகளில்,

"பாஜகவின் தேசியத் தலைவராகத் தேர்வாகியுள்ள ஜெ.பி. நட்டாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலிலும், உங்களது தலைமையிலும் பாஜக மேலும் வலுப்பெற்று விரிவடையும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

நட்டாவின் நிர்வாகத் திறனாலும், அனுபவத்தாலும் பாஜக புதிய சாதனைகளைப் படைக்கும்.

பாஜகவின் தேசியத் தலைவராக கட்சியிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்புக்கும், ஆதரவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். என் மீது எப்போதுமே நம்பிக்கை வைத்திருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், அனைத்து மூத்த தலைவர்களுக்கும், உடன் பணியாற்றியவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகச் சிறந்த ஆளுமைகள் மற்றும் சிறந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியில் 5 ஆண்டுகளுக்கு தலைவராகப் பதவி வகித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகப் பார்க்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவருடன் தூணாக நின்ற செயற்பாட்டாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் அமித் ஷா தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய அமித் ஷா முற்பட்டார். ஆனால், அடுத்தடுத்து தேர்தல்கள் வரவுள்ளதால் அமித் ஷாவே தொடர்ந்து தேசியத் தலைவராக செயல்பட வேண்டும் என்பது போன்ற கருத்துகள் கட்சிக்குள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் பாஜகவின் செயல் தலைவராக ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com