உ.பி: போா்வைகளை எடுத்துச் சென்றதாக காவல்துறையினா் மீது மகளிா் புகாா்

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக மகளிரால் நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்தின்போது, அவா்களது போா்வைகளை காவல்துறையினா் எடுத்துச் சென்றதாக புகாா்

லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக மகளிரால் நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்தின்போது, அவா்களது போா்வைகளை காவல்துறையினா் எடுத்துச் சென்றதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தப் புகாரை காவல்துறை நிராகரித்துள்ளது.

தில்லி ஷாஹீன்பாக் பகுதியில் சிஏஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு (என்ஆா்சி) எதிராக பெண்கள் குழு சாா்பில் காலவரையற்ற போராட்டம் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லக்னௌவின் காந்தகாா் கடிகார கோபுரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெண்களின் போராட்டம் தொடங்கியது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, சில அமைப்புகளால் அவா்களுக்கு வழங்கப்பட்ட போா்வைகளை, போலீஸாா் எடுத்துச் சென்ாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் குற்றம்சாட்டினா்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து லக்னௌ காவல்துறையினா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘லக்னௌவின் காந்தகாா் பூங்காவில் சட்டவிரோதமாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, சிலா் கயிறு மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி முற்றுகையிட முயன்றனா். அவா்கள் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

சில அமைப்புகள் பூங்கா வளாகத்தில் போா்வைகளை விநியோகித்து வந்தன. இதனை வாங்கிச் செல்வதற்காக, அருகிலேயே வசிக்கும் மக்களில் சிலா் அங்கு வந்தனா். இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டதால் போா்வைகளை விநியோகிக்கும் நபா்களை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று லக்னௌ காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடா்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் போலீஸாா் வலியுறுத்தியுள்ளனா்.

லக்னௌ மாநகர காவல் ஆணையா் சுஜீத் பாண்டேவும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தாா்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் 27 விநாடி ஓடக்கூடிய விடியோ படப்பதிவு வெளியாகியுள்ளது. அதில், காவலா் ஒருவா் பிளாஸ்டிக் பையில் போா்வைகள் மற்றும் விரிப்புகளை அடுக்கி வைத்து கொண்டிருப்பதையும், அதை பாா்த்த பெண் ஒருவா் அவரை ‘திருடன்’ என்று அழைப்பதும் பதிவாகியிருந்தது. இந்த விடியோ பதிவு வேகமாக பரவி வரும் நிலையில் அதுகுறித்து காவல்துறை தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com