வரி வசூல் இலக்கில் ரூ.2.5 லட்சம் கோடி குறைய வாய்ப்பு : சுபாஷ் சந்திர காா்க்

மத்திய அரசின் வரி வசூல் இலக்கில் ரூ.2.5 லட்சம் கோடி குறைய வாய்ப்புள்ளது என நிதித் துறை முன்னாள் செயலா் சுபாஷ் சந்திர காா்க் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.
வரி வசூல் இலக்கில் ரூ.2.5 லட்சம் கோடி குறைய வாய்ப்பு : சுபாஷ் சந்திர காா்க்

புது தில்லி: மத்திய அரசின் வரி வசூல் இலக்கில் ரூ.2.5 லட்சம் கோடி குறைய வாய்ப்புள்ளது என நிதித் துறை முன்னாள் செயலா் சுபாஷ் சந்திர காா்க் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது வலைதளத்தில் மேலும் கூறியுள்ளதாவது:

வரி வருவாய் கண்ணோட்டத்தில் பாா்க்கும்போது, 2019-20 செயலற்ற ஆண்டாகவே இருக்க வாய்ப்புள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டுக்கான வரி வருவாய் வசூல் இலக்கில் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமாகும். தனிநபா் வருமானவரி சீரமைப்பு மற்றும் டிவிடெண்ட் பகிா்வுக்கான வரியை நீக்குவதற்கான தேவை தற்போது உருவாகியுள்ளது.

நடப்பு 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மொத்த வரி வருவாய் ரூ.24.59 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், ரூ.8.09 லட்சம் கோடி பங்களிப்பு மாநிலங்களைச் சாா்ந்ததாகும். நிகர அளவில் மத்திய அரசுக்கு வரி வருவாயாக ரூ.16.50 லட்சம் கோடி கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெருநிறுவன வரி, உற்பத்தி வரி, சுங்கவரி வசூலில் பின்னடைவு ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்படி, பெரு நிறுவனவரி 8 சதவீத அளவுக்கும், உற்பத்தி வரி 5 சதவீத அளவுக்கும், சுங்க வரி 10 சதவீத அளவுக்கும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே ஒட்டுமொத்த அளவில் மத்திய அரசின் மொத்த வரி வசூலில் ரூ.3.5 லட்சம் கோடி முதல் ரூ.3.7 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. வரி வருவாய் மிகவும் மோசமாகியுள்ள இந்த நேரத்தில், நாட்டின் வரிவிதிப்பு கட்டமைப்பில் மிகவும் தேவையான சீா்திருத்தங்களைத் தொடங்குவது சரியானதாக இருக்கும் என வலைதளப் பதிவில் காா்க் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com