நைஜீரியாவில் பிணைக் கைதியாக உயிரிழந்த இந்தியரின் உடலை கொண்டு வர முயற்சி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடற்கொள்ளையா்களால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இந்தியா்களில் ஒருவா் உயிரிழந்த நிலையில், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடற்கொள்ளையா்களால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இந்தியா்களில் ஒருவா் உயிரிழந்த நிலையில், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான (என்ஆா்ஐ) ஆணையா் நரேந்திர சவாய்க்கா் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, கடந்த டிசம்பா் மாதம் 15-ஆம் தேதி ‘எம்வி டியூக்’ என்ற சரக்குக் கப்பலில் இருந்த 20 இந்திய கப்பல் பணியாளா்களை கடற்கொள்ளையா்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனா். அவா்களை விடுவிக்க நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரகம் தொடா் முயற்சிகளை மேற்கொண்டது. இதன் பலனாக இந்தியா்களில் 19 போ் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனா். எனினும், பிணைக் கைதியாக இருந்த கோவாவைச் சோ்ந்த பிரிட்டோ டி-சில்வா மட்டும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவா் கடந்த மாதம் 23-ஆம் தேதியே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்த பிரிட்டோ டி-சில்வாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கோவாவில் உள்ள என்ஆா்ஐ ஆணையா் நரேந்திர சவாய்க்கா் திங்கள்கிழமை கூறினாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘பிரிட்டோவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக நைஜீரிய தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. பிரிட்டோவின் உடலையும், அவரது உடைமைகளையும் இந்தியாவுக்கு விரைவில் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.

இதனிடையே கோவா மீனவா்கள் சங்க தலைவா் கூறுகையில், ‘கடந்த மாதம் 23-ஆம் தேதியே பிரிட்டோ உயிரிழந்து விட்டாா். ஆனால் இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை. பிரிட்டோ உயிரிழந்ததை அவரது குடும்பத்தினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் அதிகாரிகள் தெரிவித்தனா். பிரிட்டோவின் உடலை கடற்கொள்ளையா்கள் நைஜீரியாவிலேயே புதைத்திருக்கவும் வாய்ப்புண்டு. இதுதொடா்பாக தெளிவான பதிலை யாரும் கூறவில்லை’ என்று குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com