ஒரு ஸ்பூன் சர்க்கரை என்றால் ரூ.10 ஆயிரமா? கர்நாடகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்

பத்திரப் பதிவுக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெற சமிக்ஞை வார்த்தைகள் பயன்படுத்தும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஸ்பூன் சர்க்கரை என்றால் ரூ.10 ஆயிரமா? கர்நாடகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்


பெங்களூரு: பத்திரப் பதிவுக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெற சமிக்ஞை வார்த்தைகள் பயன்படுத்தும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் துமகுரு சார் பதிவாளர் அலுவலகத்தின் மூத்த பதிவாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஏ. பட்டீல் விசாரித்தார். மனுதாரர் கே. சதீஷ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தனது வாதங்களை முன் வைத்தார்.

அப்போது நீதிமன்றத்தில் நீதிபதி கூறியதாவது, சார் பதிவாளர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும். பத்திரங்களைப் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், சார் பதிவாளர் ஒரு கப் டீ கேட்கிறார். அப்போது பொதுமக்கள், சர்க்கரை சேர்த்தா அல்லது சர்க்கரைப் போடாமலா என்று கேட்கிறார்கள்.

அதே சமயம், பத்திரப் பதிவுக்கு லஞ்சம் கேட்காமல், நேர்மையான அதிகாரியாக இருக்கிறாரே, வெறும் டீ மட்டும் கேட்கிறாரே என்று உள்ளூர மகிழ்கிறார்கள். ஆனால் அவர்களது மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்காது. காரணம், டீயில் எத்தனை ஸ்பூன் சர்க்கரை சேர்க்கும்படி சார் பதிவாளர் சொல்கிறார் என்பதில்தான் விஷயமே இருக்கிறது.

ஒரு ஸ்பூன் சர்க்கரை என்று சொன்னால், பத்திரப் பதிவுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும், இரண்டு ஸ்பூன் என்றால் ரூ.20 ஆயிரம் என்றும், அதற்கு மேல் ஒவ்வொரு ஸ்பூனுக்கும் ஒரு 10 ஆயிரம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சொத்து மதிப்பை அடிப்படையாக வைத்து சார் பதிவாளரால் எவ்வளவு லஞ்சம் வேண்டும் என்று நிர்ணயித்து, அது சமிஞ்சை வார்த்தை மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது.

இதனை எல்லாம் நீதிபதி பட்டீல் நீதிமன்றத்தில் கூறியபோது, வழக்குரைஞர் சதீஷ் உட்பட அனைவருமே வாய் விட்டு சிரித்து விட்டார்கள்.

துமகுரு சார் பதிவாளர் அலுவலகத்தின் மூத்த சார் பதிவாளர் ராகவேந்திரா மீது, போலியான ஆவணங்களை வைத்து பத்திரப்பரவு செய்தததாக காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர் மீது நடவடிக்கை எடுக்க 4 வார காலம் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com