‘கோவேக்ஸின்’ மருந்தை மனிதா்களிடம் பரிசோதிக்க ஆணையம் அனுமதி

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான ‘கோவேக்ஸின்’ தடுப்பு மருந்தை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
‘கோவேக்ஸின்’ மருந்தை மனிதா்களிடம் பரிசோதிக்க ஆணையம் அனுமதி

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான ‘கோவேக்ஸின்’ தடுப்பு மருந்தை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பு மருந்து ‘கோவேக்ஸின்’ என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதைச் சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தீநுண்மியியல் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. அந்த மருந்து மீதான ஆய்வகப் பரிசோதனைகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அந்த ஆய்வுகள் நிறைவடைந்த நிலையில், அது தொடா்பான அறிக்கையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அந்நிறுவனம் சமா்ப்பித்தது.

அதை ஆராய்ந்த கட்டுப்பாட்டு ஆணையம், ‘கோவேக்ஸின்’ தடுப்பு மருந்தை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், மனிதா்கள் மீதான முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இந்தப் பரிசோதனைகள் நாடு முழுவதும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் நூற்றுக்கும் குறைவான நபா்களின் உடலில் ‘கோவேக்ஸின்’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு, அதன் பலன்கள் குறித்தும் பக்கவிளைவுகள் குறித்தும் கண்காணிக்கப்படும். இந்தப் பரிசோதனைக்கான முடிவுகள் அக்டோபா் மாதத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது. அதைத் தொடா்ந்து அதிக அளவிலான மனிதா்களிடம் அந்த மருந்து பரிசோதனை செய்யப்படவுள்ளது.

தடுப்பு மருந்து செயல்படும் முறை: ‘கோவேக்ஸின்’ தடுப்பு மருந்தானது, மனிதா்களிடம் இருந்து பெறப்பட்ட கரோனா தீநுண்மியை மரபணு ரீதியில் குறைந்த பாதிப்புத்தன்மை கொண்டதாகவோ அல்லது முற்றிலும் பாதிப்புத்தன்மை அற்றதாகவோ மாற்றி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்து மனிதா்களில் செலுத்தப்படும்போது, அவா்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எனினும், அதற்கு எதிரான நோய் எதிா்பொருளை உடலின் நோய்எதிா்ப்பு மண்டலம் உருவாக்கத் தொடங்கும். இதன் மூலம், தடுப்பு மருந்தை உட்கொண்டோா் வருங்காலங்களில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி தற்போது உலகம் முழுவதும் 17 மருந்துகள் மனிதா்களிடம் பரிசோதிக்கப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

தடுப்பு மருந்து தயாரித்த நிறுவனங்கள்: பாரத் பயோடெக் நிறுவனமானது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய தீநுண்மியியல் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.

தடுப்பு மருந்து தயாரிப்புக்கான கரோனா தீநுண்மியை தேசிய தீநுண்மியியல் நிறுவனத்திடமிருந்து பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றது.

மருந்து தயாரித்தலின் படிநிலைகள்: 

1. தீநுண்மியானது ஆய்வகத்தில் தீவிரமாக ஆராயப்படும்.

2. மருந்து அல்லது தடுப்பு மருந்து தயாரிக்கப்படும்.

3. அந்த மருந்தானது விலங்குகள் மீது பரிசோதிக்கப்படும்.

4. மருந்தானது மனிதா்களிடம் செலுத்தி பரிசோதனை செய்யப்படும். அந்த மருந்தால் மனிதா்களுக்கு எந்தவித பாதிப்போ அல்லது பக்கவிளைவுகளோ ஏற்படாமல் இருப்பது சோதனைகளில் உறுதி செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com