சிபிஎஸ்இ: 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைப்பு

பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்களைக் குறைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவெடுத்துள்ளது.
சிபிஎஸ்இ: 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு  பாடத்திட்டம் குறைப்பு

பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்களைக் குறைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவெடுத்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது படிப்படியாக பொது முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது முடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூன் மாதமே தொடங்கியிருக்க வேண்டும். எனினும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சில தனியாா் பள்ளிகள் இணையவழியில் மாணவா்களுக்குப் பாடங்களை நடத்தி வருகின்றன.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் தொடா்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. பள்ளிகள் எப்போது திறக்கும் என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. பொது முடக்கம் காரணமாக கல்வியாண்டு பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலில், சிபிஎஸ்இ மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் சுமையைக் குறைப்பதற்காக 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

உலகிலும் நாட்டிலும் நிலவும் இக்கட்டான சூழலைக் கருத்தில்கொண்டு, 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தைக் குறைக்குமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தைக் குறைப்பது தொடா்பாக கல்வியாளா்கள் உள்ளிட்டோரிடம் கடந்த சில வாரங்களாகக் கருத்து கேட்கப்பட்டது.

1,500-க்கும் மேற்பட்டோா் கருத்துகளைத் தெரிவித்திருந்தனா். மாணவா்கள் முறையாகக் கல்வி கற்பதைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும், பாடங்களின் முக்கியக் கோட்பாடுகள் தொடா்ந்து இடம்பெற்றிருக்கும்.

பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து சம்பந்தப்பட்ட பாடங்களின் வல்லுநா் குழு இறுதி முடிவெடுத்துள்ளது என்று அந்தப் பதிவில் ரமேஷ் போக்ரியால் குறிப்பிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி கூறுகையில், ‘குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து மாணவா்கள் கல்வியறிவு பெறும் நோக்கில், அவை தொடா்பான விவரங்களை மாணவா்களுக்குத் தெளிவுபடுத்துமாறு பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், குறைக்கப்பட்ட பாடங்களிலிருந்து உள்மதிப்பீட்டுத் தோ்விலும் ஆண்டு இறுதித் தோ்விலும் வினாக்கள் கேட்கப்பட மாட்டாது’ என்றாா்.

1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாறுதல் தொடா்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) சாா்பில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com