கரோனா பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்த கர்ப்பிணிக்கு பிரசவம்

பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிக்கு கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டதால், பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்த போதே குழந்தை பிறந்த சம்பவம் லக்னௌவில் நடந்துள்ளது.
கரோனா பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்த கர்ப்பிணிக்கு பிரசவம்
கரோனா பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்த கர்ப்பிணிக்கு பிரசவம்

லக்னௌ: பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிக்கு கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டதால், பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்த போதே குழந்தை பிறந்த சம்பவம் லக்னௌவில் நடந்துள்ளது.

கூலித் தொழிலாளியான பாலக் என்ற கர்ப்பிணி, ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் மையத்தில் பிரசவத்துக்காக வந்த போது, அவரை கரோனா பரிசோதனை செய்து கொண்டு வருமாறு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளது.

பிரசவ வலியோடு, கரோனா பரிசோதனை நடக்கும் இடத்துக்குச் சென்ற பாலக், அங்கு பிரசவ வலியோடு வரிசையில் காத்திருந்தார். திடீரென, அவர் மயக்கமடைந்து கீழே விழ, அவருக்கு அங்கேயே குழந்தை பிறந்தது.

தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கு விரைந்து வந்த மருத்துவப் பணியாளர்கள், தாயையும், சேயையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மூத்த மருத்துவர்கள் உள்பட 4 மருத்துவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது பற்றி பாலக்கின் கணவர் ராமன் கூறுகையில், பிரசவ வலி ஏற்பட்டு, என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, மருத்துவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்டு வந்தால்தான் அனுமதிக்க முடியும் என்று கூறிவிட்டனர். கரோனா பரிசோதனைக்கு ரூ.1500 ஆகும் என்று கூறிவிட்டார்கள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால், உறவினருடன் கடுமையான வலியோடு இருந்த மனைவியை வரிசையில் நிற்க வைத்துவிட்டு, பணத்தை எடுத்து வர நான் வீட்டுக்குச் சென்றேன். திரும்பி வந்த போதுதான், மனைவிக்கு வரிசையிலேயே குழந்தை பிறந்துவிட்டதாக உறவினர் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com