தெலங்கானா: தலைமைச் செயலகத்தை இடிப்பதற்கான தற்காலிக தடை நீட்டிப்பு

தெலங்கானா தலைமைச் செயலகத்தை இடிக்கும் பணிக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை புதன்கிழமை (ஜூலை 15) வரை நீட்டித்து அந்த மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹைதராபாத்: தெலங்கானா தலைமைச் செயலகத்தை இடிக்கும் பணிக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை புதன்கிழமை (ஜூலை 15) வரை நீட்டித்து அந்த மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெலங்கானாவில் உள்ள தலைமைச் செயலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய தலைமைச் செயலகம் கட்ட மாநில அரசு முடிவு எடுத்தது. இதற்கு எதிராக அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் கடந்த மாதம் 29-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமைச் செயலகத்தை இடிக்கும் பணி கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது.

இந்த பணி சட்ட நடைமுறைகளை பின்பற்றி நடைபெறவில்லை என தெரிவித்து, மாநில உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ‘சுமாா் 10 லட்சம் சதுர அடி கொண்ட தலைமைச் செயலக வளாகத்தில் இடித்தல் மற்றும் கட்டுமான விதிகள் 2016, தொற்றுநோய் தடுப்புச் சட்டம் 1897, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆகியவற்றை பின்பற்றி கட்டட இடிப்புப் பணிகள் நடைபெறவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் தொடா்பாக கடந்த 10-ஆம் தேதி விசாரணை நடத்திய நீதிமன்றம், கட்டட இடிப்புப் பணிகளுக்கு திங்கள்கிழமை (ஜூலை 13) வரை தற்காலிக தடை விதித்து, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் செளஹான், நீதிபதி விஜய்சென் ரெட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கட்டட இடிப்பு தொடா்பாக மாநில அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை முத்திரையிடப்பட்ட உரையில் சமா்ப்பிக்குமாறு தெரிவித்த நீதிபதிகள், கட்டட இடிப்புப் பணிக்கு விதிக்கப்பட்ட தடையை புதன்கிழமை (ஜூலை 15) வரை நீட்டித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com