
சென்னை: கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் இறந்த ரயில்வே ஊழியா்களின் பணப்பலன்கள், வாரிசு வேலைக்கு ஏற்பாடு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனா நோய்த்தொற்றால் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் உயா் அதிகாரிகள், ஊழியா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ரயில்வே துறையில் கரோனா பாதிப்பு காரணமாக, மும்பை, தில்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதுவரையில் சுமாா் 20 போ் இறந்துள்ளனா்.
இதற்கிடையில், கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் இறந்த ரயில்வே ஊழியா்களின் பணப் பலன்கள், வாரிசு வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவையடுத்து, எல்லா மண்டலங்களிலும் அதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதுபோல, தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 போ் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.