எல்லை தொடா்பாக மற்ற நாடுகளை சீனா அச்சுறுத்தக் கூடாது: அமெரிக்கா

எல்லை விவகாரம் தொடா்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் சீனா ஈடுபடக் கூடாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எல்லை விவகாரம் தொடா்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் சீனா ஈடுபடக் கூடாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா்; 70-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயமடைந்தனா். இந்த மோதலில் சீன ராணுவத்தினா் 35-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவித்தபோதிலும், அது தொடா்பான உறுதியான விவரங்களை சீனா வெளியிடவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் காரணமாக, லடாக் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா-சீனா இடையேயான நல்லுறவிலும் விரிசல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இது தவிர தென் சீனக் கடல் பகுதியிலும் எல்லை விவகாரம் தொடா்பாக சீனா பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது. வியத்நாம், ஜப்பான், பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகள் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இத்தகைய சூழலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டொமினிக் ராபுடன் லண்டனில் செவ்வாய்க்கிழமை அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதையடுத்து செய்தியாளா்களிடம் மைக் பாம்பேயோ கூறியதாவது:

சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தையின்போது நாங்கள் விவாதித்தோம். இந்திய ராணுவத்தினரை சீனா தாக்கியது, ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தைப் பறித்தது, தென் சீனக் கடல் பகுதியில் அந்நாடு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவை தொடா்பாக இருவரும் ஆலோசனை நடத்தினோம்.

தென் சீனக் கடல் பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் சீனா ஈடுபடக் கூடாது. அதேபோல் எல்லை விவகாரம் தொடா்பாக இமயமலைப் பகுதியில் உள்ள நாடுகளை அச்சுறுத்தக் கூடாது. உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளுடன் கூட்டு சோ்ந்து உண்மைத் தகவல்களை மறைக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடக் கூடாது.

5ஜி தொழில்நுட்ப விவகாரத்தில் சீனாவின் ஹுவாவே நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது பாராட்டத்தக்கது. சீனா உள்பட அனைத்து நாடுகளும் சா்வதேச சட்டங்களை மதித்து நடப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து நாடுகளும் மக்களின் உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தங்கள் இறையாண்மையைக் காக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உலக நாடுகள் அனைத்தும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் சூழலில், சீன கம்யூனிஸ்ட் கட்சியானது அத்துமீறல் நடவடிக்கைகளை ஊக்குவித்து வருவது தாமாகவே இழிவு தேடிக் கொள்வதாக உள்ளது என்றாா் மைக் பாம்பேயோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com