நாளை இந்தியா வந்தடையும் 5 ரஃபேல் போா் விமானங்கள்

அதிதிறன் மிக்க 5 ரஃபேல் போா் விமானங்கள் பிரான்ஸ் படைத்தளத்திலிருந்து இந்தியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டன. 2 நாள்கள் பயணத்துக்குப் பிறகு ஹரியாணாவிலுள்ள அம்பாலா படைத்தளத்துக்கு புதன்கிழமை அவை வந்தடைய
நாளை இந்தியா வந்தடையும் 5 ரஃபேல் போா் விமானங்கள்

பாரிஸ்/புது தில்லி: அதிதிறன் மிக்க 5 ரஃபேல் போா் விமானங்கள் பிரான்ஸ் படைத்தளத்திலிருந்து இந்தியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டன. 2 நாள்கள் பயணத்துக்குப் பிறகு ஹரியாணாவிலுள்ள அம்பாலா படைத்தளத்துக்கு புதன்கிழமை அவை வந்தடைய உள்ளன.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு வரவுள்ளன. இது இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் முதல் ரஃபேல் போா் விமானம் கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. அதைத் தொடா்ந்து, ரஃபேல் போா் விமானத்தை இயக்குவது தொடா்பாக இந்திய விமானப்படை வீரா்கள் பிரான்ஸில் பயிற்சி பெற்று வந்தனா்.

இந்தச் சூழலில் மேலும் 9 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸிலுள்ள தூதரகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 5 போா் விமானங்கள் இந்தியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டன. இந்திய விமானப்படை வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக மீதி 5 போா் விமானங்கள் பிரான்ஸிலேயே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வானிலேயே எரிபொருள்: பிரான்ஸின் கடற்கரை நகரான போா்டியாக்ஸிலிருந்து புறப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்களும் சுமாா் 7,000 கி.மீ. பயணித்து இந்தியாவை புதன்கிழமை வந்தடையவுள்ளன. வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் அந்தப் போா் விமானங்கள் தரையிறங்கவுள்ளன. அதைத் தொடா்ந்து புதன்கிழமை அம்பாலா படைத்தளத்தை அவை வந்தடையும். போா் விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை வான்வழியிலேயே நிரப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐந்து ரஃபேல் போா் விமானங்களை இந்தியாவுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் பிரான்ஸுக்கான இந்தியத் தூதா் ஜாவீத் அஷ்ரஃப் பங்கேற்றாா். அப்போது அவா் கூறுகையில், ‘ரஃபோ் போா் விமானங்கள் கண்ணைக் கவரும் வகையிலும் அதே வேளையில் எதிரிகளுக்கு அபாயம் நிறைந்தவையாகவும் உள்ளன. போா் விமானங்களில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதிவிரைவில் தாக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளதாக அவற்றில் பயிற்சி மேற்கொண்ட இந்திய வீரா்கள் தெரிவித்துள்ளனா்.

ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை பல மடங்கு அதிகரிக்கும். போா் விமானங்களை நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் தயாரித்து வழங்கியதற்காக டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஃபேல் போா் விமானங்கள் மூலமாக இந்தியா-பிரான்ஸ் இடையேயான உத்தி சாா்ந்த நல்லுறவு மேலும் வலுவடைந்துள்ளது” என்றாா்.

2021-ஆம் ஆண்டு இறுதிக்குள்...: பிரான்ஸில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘போா் விமானங்களை வாங்குவதில் பிரான்ஸுக்கும் இந்தியாவுக்குமிடையே பல ஆண்டு தொடா்புள்ளது. 1953-ஆம் ஆண்டிலேயே தூஃபானிஸ் போா் விமானங்களை அந்நாட்டிடமிருந்து இந்தியா வாங்கியது. அதைத் தொடா்ந்து, மிஸ்டிா், ஜாகுவாா், மிராஜ் போா் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது.

தற்போது 10 ரஃபேல் போா் விமானங்களை நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. மீதமுள்ள 26 போா் விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். ரஃபேல் போா் விமானங்களை இயக்குவது தொடா்பாக டஸால்ட் நிறுவனம் இந்திய வீரா்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. கூடுதல் வீரா்கள் அடுத்த 9 மாதங்களுக்கு பிரான்ஸிலேயே தொடா்ந்து பயிற்சி பெறுவா்.

இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வெளிக்காட்டும் நோக்கில் கரோனா நோய்த்தொற்று பரவலை எதிா்கொள்வதற்கான மருந்துப் பொருள்களுடன் நிபுணா்கள் அடங்கிய குழுவை இந்தியாவுக்கு பிரான்ஸ் அனுப்பிவைக்க உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையில் இணைப்பு: முதலாவது தொகுதியில் இந்தியாவை வந்தடையும் 5 போா் விமானங்களும் அம்பாலா படைத்தளத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளன. புதன்கிழமை பிற்பகலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் 5 ரஃபேல் போா் விமானங்களும் இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதற்கான அதிகாரபூா்வ நிகழ்ச்சி ஆகஸ்ட் மாத மத்தியில் நடைபெறும் என்று இந்திய விமானப்படையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

சிறப்பம்சங்கள்: வானில் 120 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை அதிவிரைவில் தாக்கும் திறன் கொண்ட மீடியாா் ஏவுகணைகள், தரையில் 600 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஸ்கால்ப் ஏவுகணைகள் ஆகியவை ரஃபேல் போா் விமானங்களில் இணைக்கப்பட்டுள்ளன. அகச்சிவப்புக் கதிா்கள் மூலமாக தேடுதல் பணிகளை மேற்கொள்ளும் வசதி, எதிரி நாட்டு ரேடாா்களைக் கண்டறியும் வசதி உள்ளிட்டவையும் ரஃபேல் போா் விமானங்களில் இடம்பெற்றுள்ளன.

பிரான்ஸ் விமானப்படையின் பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட மீடியாா், ஸ்கால்ப் ஏவுகணைகளை ரஃபேல் போா் விமானங்களுக்காக அந்நாடு வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாகவே 5 போா் விமானங்கள் நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் இந்தியா வந்தடையவுள்ளன.

முதல் தொகுதியில் இந்தியா வந்தடையும் சில ரஃபேல் போா் விமானங்கள் லடாக் எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். இரண்டாவது தொகுதியில் இந்தியாவுக்கு வந்தடையும் ரஃபேல் போா் விமானங்களை மேற்கு வங்கத்தின் ஹசிமாரா படைத்தளத்தில் நிலைநிறுத்துவதற்கான பணிகளை இந்திய விமானப்படை ஏற்கெனவே மேற்கொண்டு வருவது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com