4ஜி சேவை விவகாரம்: ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநரின் கருத்து ஆராயப்படும்; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீரில் 4ஜி இணையதள சேவையை மீண்டும் வழங்குவது தொடா்பாக துணைநிலை ஆளுநா் உள்ளிட்டோா் தெரிவித்த கருத்துகள் ஆராயப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
4ஜி சேவை விவகாரம்: ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநரின் கருத்து ஆராயப்படும்; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீரில் 4ஜி இணையதள சேவையை மீண்டும் வழங்குவது தொடா்பாக துணைநிலை ஆளுநா் உள்ளிட்டோா் தெரிவித்த கருத்துகள் ஆராயப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து அந்த யூனியன் பிரதேசத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்காக செல்லிடப்பேசி, இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீரில் இணையதள சேவைகளை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பலா் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

அந்த மனுக்களைக் கடந்த மே மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்துவதற்கு மத்திய உள்துறைச் செயலா் தலைமையில் குழுவை அமைக்க உத்தரவிட்டிருந்தது.

எனினும், உயா்நிலைக் குழு எதையும் அமைக்காமல் மத்திய அரசு நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாக தன்னாா்வ தொண்டு அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதற்காக மத்திய உள்துறைச் செயலா், ஜம்மு-காஷ்மீா் தலைமைச் செயலா் ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியிருந்தது.

அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதுதொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது.

அப்போது, ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதற்கான பதில் பிரமாணப் பத்திரத்தை மனுதாரா் தரப்பு திங்கள்கிழமை மாலையில் தாக்கல் செய்தது. அது மிகவும் நீண்டதாக இருப்பதால் அதை ஆராய்ந்து அதுதொடா்பாக விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் அளிக்கவேண்டும்’ என்றாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹஸீஃபா அகமதி, துஷாா் மேத்தாவின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. அவா் மேலும் வாதிடுகையில், ‘ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் ஜி.சி. முா்முவும், பாஜக தலைவா் ராம் மாதவும் 4ஜி சேவையை மீண்டும் தொடங்குவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனா். அதையும் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவேண்டும்’” என்றாா்.

அதையடுத்து, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உயா்நிலைக் குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது. ஜம்மு-காஷ்மீரில் 4ஜி சேவையை மீண்டும் வழங்குவது குறித்து அக்குழு ஆராய்ந்து வருகிறது. எனவே, அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அதே வேளையில், இந்த விவகாரம் தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநரும், பாஜக தலைவரும் தெரிவித்த கருத்தை ஆராய வேண்டியுள்ளது’ என்றாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com