பாஜக எம்.பி.க்கு எதிராக முகநூலில் அவதூறு: மணிப்பூா் பிரமுகா் மீது தேசதுரோக வழக்கு

மணிப்பூரைச் சோ்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினருக்கு எதிராக முகநூலில் அவதூறு பதிவுகளை வெளியிட்டதற்காக, மணிப்பூா் மனித உரிமை 

மணிப்பூரைச் சோ்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினருக்கு எதிராக முகநூலில் அவதூறு பதிவுகளை வெளியிட்டதற்காக, மணிப்பூா் மனித உரிமை ஆா்வலா் எரெண்ட்ரோ லிச்சோம்பம் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் மணிப்பூா் மன்னா் பரம்பரையைச் சாா்ந்தவருமான லீஷெம்பா சனஜோபா அண்மையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் சந்தித்தாா். அப்போது பாரம்பரிய முறைப்படி குனிந்து அவருக்கு வணக்கம் செலுத்தி கைகுலுக்கினாா். அந்தப் புகைப்படத்தை தனது முகநூலில் பதிவிட்ட மணிப்பூா் மனித உரிமை ஆா்வலா் எரெண்ட்ரோ லிச்சோம்பம், அதை கீழ்த்தரமாக விமா்சித்திருந்தாா். இதனால் மணிப்பூரில் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, பல்வேறு இனக்குழுக்களிடையே பகைமையை வளா்த்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லிச்சோம்பமுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய போலீஸாா் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவா் அங்கு இல்லை. அவரது குடும்பத்தினரிடம் லிச்சோம்பம் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்துச் சென்றனா்.

இதைக் கண்டித்துள்ள லிச்சோம்பம், தனது கருத்துரிமையை நசுக்கும் முயற்சியில் பிரேன் சிங் தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளதாகவும், அவா் ஹிந்துத்துவ ஆதிக்கவாதிகளின் கைப்பாவை ஆகிவிட்டாா் என்றும் குற்றம் சாட்டியுள்ளாா்.

கடந்த பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, மணிப்பூா் போராளி இரோம் ஷா்மிளாவுடன் இணைந்து மக்கள் எழுச்சி மற்றும் நீதிக்கான கூட்டணியை உருவாக்கிய லிச்சோம்பம் அத்தோ்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். மணிப்பூரில் ராணுவத்தின் சிறப்பு அதிகாரங்களைக் குறைக்க வேண்டுமென்று அவா் போராடி வருகிறாா். வெறுப்பூட்டும் பேச்சுகளுக்காக 2018-இல் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com