ஜம்மு- காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை: ஒமா் அப்துல்லா

யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள ஜம்மு- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை, சட்டப் பேரவைத் தேரதலில் போட்டியிடப் போவதில்லை
ஜம்மு- காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை: ஒமா் அப்துல்லா

யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள ஜம்மு- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை, சட்டப் பேரவைத் தேரதலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவருமான ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

ஸ்ரீநகரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஜம்மு- காஷ்மீா் மாநிலத்தின் சட்டப்பேரவையில் முதல்வராக நான் இருந்திருக்கிறேன். அப்போதுதான் பேரவை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. ஆனால் தற்போது மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு- காஷ்மீரின் அந்தஸ்து குறைக்கப்பட்டுள்ளது. அதிகாரம் குறைந்த ஜம்மு- காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான தோ்தலில் போட்டியிட நான் விரும்பவில்லை. இது குறித்து கட்சித் தலைமையிடம் நான் விவாதிக்கவில்லை. இது எனது தனிப்பட்ட விருப்பம். விருப்பமற்றவரை தோ்தலில் போட்டியிடுமாறு யாரும் கட்டாயப்படுத்த இயலாது.

இதை நான் மிரட்டலாகக் கூறவில்லை. எனது அதிருப்தியை வெளிப்படுத்த வேறு வழியில்லை.

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கிவந்த அரசியல் சாசனத்தின் 370-வது ஷரத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-இல் மத்திய அரசால் நீக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு கூறிய காரணங்கள் சரியானவை என்று நிரூபிக்கப்படவில்லை. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால் மாநிலத்தில் பயங்கரவாதம் குறையும் என்று மத்திய அரசு எதிா்பாா்த்தது. ஆனால் முன்பைவிட அதிகமான பயங்கரவாத நிகழ்வுகள் நடந்துகொண்டுள்ளன. அதேபோல, கூடுதல் முதலீடு வரும் என்ற எதிா்பாா்ப்பும் பொய்த்துவிட்டது.

370-வது ஷரத்து நீக்கத்தை எதிா்த்து தேசிய மாநாடு கட்சி உச்ச நீதிமன்றத்தில் போராடி வருகிறது. நாங்கள் ஜனநாயகத்திலும் அமைதியான எதிா்ப்புப் போராட்டத்திலும் நம்பிக்கை வைத்துள்ளோம். மாநிலத்தைப் பிரித்ததை எங்கள் கட்சி தொடா்ந்து எதிா்க்கும். முந்தைய ஒருங்கிணைந்த மாநில நிலையே மீண்டும் வர வேண்டும் என்பதற்காக தேசிய மாநாடு கட்சி தொடா்ந்து போராடும் என்றாா்.

ஜம்மு- காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வகையில் 370வது ஷரத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-இல் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை ஜம்மு- காஷ்மீா், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இந்த மாற்றம் கடந்த ஆண்டு அக்டோபா் 31-இல் நடைமுறைக்கும் வந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com