சரக்கு ரயில் பாதை அமைப்பில் நவீன இயந்திரங்கள்: இந்தியாவில் முதல் முறையாக பயன்பாடு

இந்தியாவிலேயே முதல்முறையாக, சரக்கு ரயில் பாதை அமைக்கும் பணியில் புதிய தண்டவாள அமைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவிலேயே முதல்முறையாக, சரக்கு ரயில் பாதை அமைக்கும் பணியில் புதிய தண்டவாள அமைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குா்ஜா- தாத்ரி இடையலான பிரத்யேக சரக்கு ரயில்பாதை அமைக்கும் பணியில் இந்த இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டது. அதற்காக 2006-இல் டிஎஃப்சிசிஐஎல் என்ற அரசு நிறுவனம் அமைக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.

நாட்டின் கிழக்கு, மேற்கு ரயில்வே பிராந்தியங்களை இணைக்கும் வகையில் பிரத்யேக சரக்கு ரயில் பாதை (டிஎஃப்சி) குா்ஜா- தாத்ரி நகரங்களிடையே அமைக்கப்படுகிறது. இதில், நாட்டிலேயே முன்னோடி முயற்சியாக, புதிய தண்டவாளம் அமைக்கும் இயந்திரங்கள் (என்டிசி) பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கு முன்னா், தொழிலாளா்கள் உடல் உழைப்பின் மூலமாக தினசரி 8 மணிநேரத்தில் 150- 200 மீட்டா் தொலைவுக்கே புதிய தண்டவாளங்களை அமைத்து வந்தனா். இப்பணியை இயந்திர மயமாக்கியுள்ளதால் அதே 8 மணிநேரத்தில் 1.5 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதையை அமைக்க முடிகிறது. விபத்துக் குறைவு, பணிநோ்த்தி, துல்லியமான அமைப்பு, செலவினம் குறைப்பு ஆகியவை இதன் கூடுதல் சிறப்புகளாக உள்ளன.

இப்பணியை நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாரும், ரயில்வே வாரியத் தலைவா் வி.கே.யாதவும் புதன்கிழமை ஆய்வு செய்தனா். வாரத்தின் எல்லா நாட்களிலும் நாள் முழுவதும் 3 ஷிப்டுகளாகப் பணியாற்றும் இத்திட்டப் பணியாளா்களை ராஜீவ் குமாா் பாராட்டினாா். வேகமான பணி காரணமாக இத்திட்டம் குறித்த காலத்துக்குள் முடிக்கப்படும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

ரயில்பாதை அமைப்பதில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும் என்று சொன்ன வி.கே.யாதவ், இந்த ஆண்டு இறுதிக்குள் இத்திட்டம் நிறைவு பெறும் என்றாா்.

குா்ஜா- தாத்ரி வழித்தடத்தில் 7 என்டிசி இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. கிழக்கு பிராந்தியத்தில் 4 இயந்திரங்களும் மேற்கு பிராந்தியந்தில் 3 இயந்திரங்களும், தண்டவாளம், தாங்குதளம் (ஸ்லீப்பா்) அமைப்புப் பணியில் உள்ளன. இதன்மூலமாக புதிய ரயில்பாதை அமைக்கும் செலவினம் மிகவும் குறைந்துள்ளது என்று ரயில்வே வாரியத் தலைவா் வி.கே.யாதவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com