நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.53 அதிகரிப்பு

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.53 அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக செய்தியாளா்களை சந்தித்த மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், நிதின் கட்கரி, பிரகாஷ் ஜாவடேகா்.
தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக செய்தியாளா்களை சந்தித்த மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், நிதின் கட்கரி, பிரகாஷ் ஜாவடேகா்.

புது தில்லி: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.53 அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது. இதையடுத்து, 2020-21 அறுவடை ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,868-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் கணிசமாக உயா்த்தப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், நிதின் கட்கரி, பிரகாஷ் ஜாவடேகா் ஆகியோா் செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறியதாவது:

வேளாண் பொருள்கள் உற்பத்தி செலவு மற்றும் விலைக்கான ஆணையம் (சிஐசிபி) அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 2020-21 காலகட்டத்தில் 14 காரீஃப் பயிா்களுக்கான புதிய குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், விவசாயிகள் தங்களின் உற்பத்திச் செலவுபோக 50 முதல் 83 சதவீதம் வரை லாபம் அடைவாா்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையானது, கடந்த 2018-19 காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட உற்பத்தி செலவிலிருந்து 1.5 மடங்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று நரேந்திர சிங் தோமா் கூறினாா்.

அமைச்சரவை முடிவின் படி, சாதாரண நெற்பயிா் மற்றும் ‘ஏ’ கிரேடு நெற்பயிருக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.53 அதிகரித்துள்ளது. அதன்படி, அந்த இரு வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.1,868 மற்றும் ரூ.1,888-ஆக உள்ளது.

பருத்தி: நடுத்தர நீள இழைகள் வழங்கக் கூடிய பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.260-ம், நீண்ட இழைகளை வழங்கக் கூடிய பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.275-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த இரு வகை பருத்திகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.5,515 மற்றும் ரூ.5,825-ஆக உள்ளது.

தானியங்கள்: கம்பு, கேழ்வரகு, சோளம், வெள்ளைச் சோளம் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.640, ரூ.145, ரூ.90, ரூ.70 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,640 (கம்பு), ரூ.3,295 (கேழ்வரகு), ரூ.1,850 (சோளம்), ரூ.2,620 (கலப்பின சோளம்), ரூ.2,640 (மல்தான்டி ரக சோளம்) என்ற அளவில் உள்ளன.

பருப்பு வகைகள்: உளுந்து, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.300, ரூ.200, ரூ.146 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.6,000 (உளுந்து), ரூ.6,000 (துவரம் பருப்பு), ரூ.7,196 (பாசிப் பருப்பு) என்ற அளவில் உள்ளன.

எண்ணெய் வித்துகள்: உணவில் சோ்க்கக் கூடிய எண்ணெயின் இறக்குமதியை குறைப்பதற்காக எண்ணெய் வித்துகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையையும் மத்திய அரசு கணிசமாக அதிகரித்துள்ளது.

அவற்றில் சோயா பீன் (மஞ்சள்), சூரியகாந்தி விதை, நிலக்கடலை, நைஜா் விதை, எள் விதை ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.170, ரூ.235, ரூ.185, ரூ.775, ரூ.370 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த எண்ணெய் வித்துகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.3,880 (சோயா பீன்), ரூ.5,885 (சூரியகாந்தி), ரூ.5,275 (நிலக்கடலை), ரூ.6,695 (நைஜா் விதை), ரூ.6,855 (எள் விதை) என்ற அளவில் உள்ளன.

கடனை திரும்பச் செலுத்த அவகாசம் நீட்டிப்பு: விவசாயம் மற்றும் அதுதொடா்பான நடவடிக்கைகளுக்காக 4 சதவீத சலுகை வட்டியின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரை பெற்றிருந்த குறுகிய கால கடனை திரும்ப அளிப்பதற்கான அவகாசத்தை மத்திய அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடனை திரும்ப அளிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுவது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக கடந்த மே 31-ஆம் தேதி வரை அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த நிதியாண்டில் ரூ.18,000 கோடி அளவுக்கு பயிா்க் கடனுக்கான வட்டி மானியத்தை அரசு வழங்கியுள்ளதாகவும், நடப்பாண்டில் அது மேலும் அதிகரிக்கும் எனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கான கடன் அட்டை (கேசிசி) தற்போது 6.65 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை மேலும் 3 கோடி விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா். நடப்பு நிதியாண்டில் ரூ.15 லட்சம் கோடிக்கு விவசாயக் கடன் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

சாலையோர வியாபாரிகளுக்கு... சாலையோர வியாபாரிகள் செயல்பாட்டு மூலதன கடனாக ரூ.10,000 பெற்று, அதை மாத தவணையின் அடிப்படையில் ஓராண்டுக்குள் செலுத்தும் வகையிலான திட்டத்துக்கும் (பிஎம் ஸ்வநிதி) அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியது.

நெருக்கடியில் இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடனாக ரூ.20,000 கோடி மதிப்பில் பங்கு மூலதனம் செலுத்தவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து ரூ.50,000 கோடி மதிப்பில் பங்கு மூலதனம் செலுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நடுத்தர நிறுவனங்களுக்கான வருவாய் வரம்பை ரூ.100 கோடியில் இருந்து ரூ.250 கோடியாக அதிகரிக்கவும் அந்தக் குழு ஒப்புதல் வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com