அரசு முத்திரையால் வந்த குழப்பம்: ரயில் பயணத்தில் பாதியில் இறக்கி விடப்பட்ட பெண்

ரயில் பயணிகளுக்கான அரசு விதிமுறைகளைப் பற்றித் தெரியாமல் ஏற்பட்ட குழப்பத்தால், பெண் பயணி ஒருவர் நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூரு: ரயில் பயணிகளுக்கான அரசு விதிமுறைகளைப் பற்றித் தெரியாமல் ஏற்பட்ட குழப்பத்தால், பெண் பயணி ஒருவர் நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு செவ்வாயன்று பெண் ஒருவர் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ‘ட்ரான்ஸிட்’ எனப்படும் இடைநிறுத்தப் பயணி என்பதால் அதற்குரிய முத்திரை அவரது கைமூட்டில் இடப்பட்டிருந்தது. இத்தகைய பயணிகள் தங்களது சேருமிடம் சென்று அடைந்ததும், 14 நாட்கள் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மாநில அரசின் விதிமுறையாகும்.

இதுதொடர்பான விதிமுறைகள் எதுவும் தெரியாத சக பயணிகள் சிலர் ரயில் புறப்பட்ட பின்னர் அவரது கையில் இருந்த முத்திரையைக் கவனித்து, அவர் தனிமைப்படுத்துதலின் பொருட்டு தனக்கு இடப்பட்ட முத்திரையை மதிக்காமல், விதிமுறைகளை மீறி வெளியே திரிகிறார் என்று கூறி, அவரை பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று கூறி கலாட்டாவில் ஈடுபட்டனர். அத்துடன் அவரை உடனடியாக இறக்கி விட வேண்டும் என்று பயணச்சீட்டு பரிசோதகரிடமும் புகார் அளித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக அவருக்கும் இதுகுறித்த நடைமுறைகள் தெரியாத காரணத்தால், பயணிகளின் வேண்டுகோளின்படி அப்பெண்ணை தும்கூர் ரயில் நிலையத்தில் வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளனர்.

இது மிகவும் வருந்தத்தக்க சம்பவமாகும். பின்னர் அப்பெண் வேறொரு ரயிலில் பெலகாவி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com