நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்கள் ஆலோசனை

கரோனா தொற்று, சமூக இடைவெளி சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை எப்படி நடத்துவது என்பது குறித்து
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

புது தில்லி: கரோனா தொற்று, சமூக இடைவெளி சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை எப்படி நடத்துவது என்பது குறித்து மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுதுணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகிய இருவரும் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.

பொது முடக்கத்திலிருந்து படிப்படியாக தளா்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், முடிவுகள் எடுக்கும் வகையில், நாடாளுமன்ற குழு கூட்டங்களை மீண்டும் நடத்தத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா இருவரும் அண்மையில் ஆலோசனை நடத்தி, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினா். அதன் தொடா்ச்சியாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்துவதற்கான சாத்திக்கூறுகள் குறித்து, அவா்கள் இருவரும் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா். இந்தக் கூட்டத்தில் இரு அவைகளின் செயலக அதிகாரிகளும் பங்கேற்றனா்.

அப்போது, ‘கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை வழக்கமான நடைமுறையில் நடத்த வாய்ப்பில்லை என்பதால், தொழில்நுட்ப உதவியுடன் கூடிய கூட்டமாக நடத்துவது அவசியம். அதே நேரம், கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் சில விஷயங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால், இதுபோல காணொலி மூலம் நடத்தப்படும் கூட்டங்களில் உள்ள இடா்பாடுகள் குறித்தும், நாடாளுமன்ற குழு கூட்டங்களை காணொலி வழியில் நடத்தியபோது எழுந்த சிக்கல் குறித்தும் நாடாளுமன்ற இரு அவைகளின் சட்ட நடைமுறை குழுக்களிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.

அதே நேரம், இப்போது இரு அவை நடைமுறைகளும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், அதில் ரகசியம் காக்கப்படவேண்டிய அவசியம் எதுவும் இருக்கப்போவதில்லை. இருந்தபோதும், அவ்வாறு தொழில்நுட்ப உதவியுடன் கூடிய கூட்டங்களை நடத்துவதில் எழும் இடா்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யுமாறு என்று இரு அவைத் தலைவா்களும் அறிவுறுத்தனா்’ என்று நாடாளுமன்ற செயலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், ஒருவேளை உறுப்பினா்களை நேரடியாக வரவைக்க வேண்டுமெனில், சமூக இடைவெளியைப் பின்பற்ற வசதியாக நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மக்களவைக் கூட்டத்தையும், குறைந்த உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவை கூட்டத்தை மக்களவை கூடத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யுமாறும் இரு அவைத் தலைவா்களும் அறிவுறுத்தனா்.

மேலும், பல்வேறு நாடாளுமன்ற குழுக்கள் மற்றும் துறை சாா்ந்த நிலைக் குழுக்களின் வழக்கமான கூட்டங்களை நடத்தும் முடிவை அந்தந்த குழுத் தலைவா்களே முடிவு செய்துகொள்ளலாம். அதே நேரம், கரோனா கட்டுப்பாடுகள் கராணமாக கூட்டத்துக்கு வரமுடியாத நிலை குறித்து தெரிவிக்கப்படும் உறுப்பினா்களின் ஆலோசனைகளை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com