குழந்தையை திருடி, கேக் கொடுத்து கொண்டாடிய பெண் கைது

தனக்கு குழந்தை பிறக்காது என்பதால், மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிச் சென்று, அக்கம் பக்கத்தினருக்கு கேக் கொடுத்து கொண்டாடிய பெண்ணும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாதிரிப்படம்
மாதிரிப்படம்


லக்னௌ: தனக்கு குழந்தை பிறக்காது என்பதால், மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிச் சென்று, அக்கம் பக்கத்தினருக்கு கேக் கொடுத்து கொண்டாடிய பெண்ணும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சீமா ஷுக்லா என்ற பெண்ணுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்துவிட்டனர். இதனால் மனம் உடைந்த சீமா, மருத்துவமனையில் இருந்து குழந்தையைத் திருட முடிவெடுத்தார்.

லக்னௌவில் உள்ள குயின் மேரிஸ் மருத்துவமனைக்கு அருகில் கடை நடத்திவரும் சீமாவின் கணவர் சஞ்சய், அவருக்கு உதவி செய்தார். மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்கும் தகவலை சீமாவுக்கு கணவர் சொல்ல, சீமாவும் திட்டத்தைத் தீட்டினார்.

அப்போதுதான் மருத்துவமனையில் ஜெகதீஷ் என்பவரின் மனைவி மம்தாவுக்கு மே 13-ம் தேதி அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்திருந்தது. இந்த நிலையில், வேறு ஒரு உடல்நலப் பிரச்னை காரணமாக மே 24ம் தேதி மம்தாவுக்கு வேறொரு அறுவை சிகிச்சை நடைபெற வேண்டியது இருந்தது.

அப்போது குழந்தையை வைத்திருந்த ஜெகதீஷ், பர்தா அணிந்திருந்த ஒரு பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அந்த பெண் மருத்துவமனை ஊழியர் என்று ஜெகதீஷ் நினைத்திருந்தார். ஆனால் திரும்பி வந்து பார்த்தபோது பெண்ணும், குழந்தையும் அங்கே இல்லை.

உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார் ஜெகதீஷ். இது பற்றி வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த காவல்துறையினர், ரிவர் பேங்க் காலனி என்ற பகுதியில், அந்த பர்தா அணிந்த பெண் குழந்தையுடன் செல்வதை கண்டறிந்தனர். அங்கு வசிக்கும் மக்களிடம் இது பற்றி கேட்டதற்கு, ஒரு தம்பதி தங்களுக்குக் குழந்தை பிறந்திருப்பதாகச் சொல்லி கேக் கொடுத்ததை ஒருவர் தெரிவித்தார்.

உடனடியாக விசாரணை நடத்தி சீமா - சஞ்சய் தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர். குழந்தை பிறக்காது என்பதால் தனது மனைவி மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காகவே அவர் குழந்தையை திருட தாம் உதவி செய்ததாகவும் குற்றத்தை ஒப்புக் கொண்டார் சஞ்சய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com