தொலைமருத்துவ முறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி காணொலியில் பேச்சு

புதிதாகக் கிடைத்துள்ள தொலைமருத்துவம் (டெலிமெடிசின்) முறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
தொலைமருத்துவ முறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி காணொலியில் பேச்சு

பெங்களூரு: புதிதாகக் கிடைத்துள்ள தொலைமருத்துவம் (டெலிமெடிசின்) முறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பெங்களூரில் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, புது தில்லியில் இருந்து காணொலி வழியே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திங்கள்கிழமை அவர் பேசியது: 


ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன என்றால், அது தனது இளமைப் பருவத்தில் உள்ளது. இன்னும் பெரிய சாதனைகளை புரிவதற்கு இதுதான் சரியான காலமாகும். எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் மென்மேலும் உயரும் என்று நம்புகிறேன். 

கரோனா தீநுண்மி தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். இரண்டு உலகப் போர்களுக்கு பிறகு, கரோனா பிரச்னையால் உலகம் தத்தளித்துள்ளது. உலகப் போர்களுக்குப் பிறகு உலகம் மாறியதுபோல, கரோனாவுக்குப் பிறகு உலகம் வேறுமாதிரி இருக்கும். கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரின் பின்னணியில் மருத்துவ சமுதாயமும், கரோனா களப் பணியாளர்களும் இருக்கிறார்கள். இந்தப் போரில், மருத்துவ சமுதாயம் கண்டிப்பாக வெற்றிபெறும்.

சுகாதாரத் துறையில் வளர்ச்சி காண்பது முக்கியம்: உலக மயமாக்கலின்போது, பொருளாதாரம் சார்ந்த விவாதம் காணப்பட்டது. தற்போது, மனிதநேயத்தை மையப்படுத்திய வளர்ச்சி குறித்து உலகம் ஒன்றுகூடிச் சிந்திக்க வேண்டும். சுகாதாரத் துறையில் வளர்ச்சியைக் காண்பது முக்கியம். கடந்த 6 ஆண்டுகளாக சுகாதாரம், மருத்துவக் கல்வியில் ஏராளமான முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. 

சுகாதாரத் துறையில் வருமுன் காப்பது, விலை மலிவு, மருத்துவக் கட்டமைப்பு, திட்ட அமலாக்கம் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். வருமுன் காப்பதில் யோகா, ஆயுர்வேதம், பொதுவான உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த 40 ஆயிரம் உடல்நல மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வருமுன் காப்பதில் தூய்மை இந்தியாவின் வெற்றியும் அடங்கியுள்ளது. மலிவான சுகாதார வாய்ப்புகளை அளிப்பதில் இந்தியா சாதித்துள்ளது. ஆயுள்நிறை இந்தியா (ஆயுஷ்மான்பாரத்) என்ற திட்டத்தில் 2 ஆண்டுகளில் ஒருகோடி பேர் பயனடைந்துள்ளனர். அதிலும் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் தான் அதிகம் பயனடைந்தவர்கள். 

இந்தியா போன்ற பரந்த நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவக் கல்விக் கட்டமைப்பு வலிமையாக இருக்க வேண்டும். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அல்லது முதுநிலை மருத்துவ மையங்களைத் திறக்கத் திட்டமிட்டு வருகிறோம்.

நாடெங்கும் மேலும் 22 அகில இந்திய மருத்துவ அறிவியல் மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 30 ஆயிரம் மருத்துவ இடங்கள், 15 ஆயிரம் முதுநிலை மருத்துவ இடங்களைச் சேர்த்திருக்கிறோம். இந்திய மருத்துவ மன்றத்துக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைத்திருக்கிறோம். இது மருத்துவக் கல்வித் தரத்தை பன்னாட்டுத் தரத்துக்கு மேம்படுத்தும். நமது திட்டமிடல்களை அமல்படுத்துவது மிகவும் முக்கியமாகும். மருத்துவத் துறையில் காணப்படும் மருத்துவசார் ஊழியர்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்கு சட்டம் கொண்டுவர இருக்கிறோம். 

தொலைமருத்துவத்துக்கு (டெலிமெடிசின்) முக்கியத்துவம் அளித்து பிரபலப்படுத்துவது, சுகாதாரத் துறையில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை அமல்படுத்துவது, சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 

கும்பல் மனோபாவம் காரணமாக, கரோனா தொற்றுநோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மீது சில இடங்களில் வன்முறை ஏவப்பட்டுள்ளது. வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது. முன்வரிசை களப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர். 

இந்த விழாவில், ஆளுநர் வஜுபாய்வாலா, முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் கே.சுதாகர், பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சச்சிதானந்த் உள்ளிட்டோர் 
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com