குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா: ஜூன் 19-இல் மாநிலங்களவைத் தேர்தல்

​குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இருவர் ராஜிநாமா செய்துள்ளனர்.
குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா: ஜூன் 19-இல் மாநிலங்களவைத் தேர்தல்


குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இருவர் ராஜிநாமா செய்துள்ளனர்.

ஜூன் 19-ஆம் தேதி 4 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2 எம்எல்ஏ-க்களும் ராஜிநாமா செய்துள்ளனர்.

குஜராத்தில் ஜூன் 19-ஆம் தேதி 4 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போது 3 இடங்கள் பாஜகவிடமும், 1 இடம் காங்கிரஸிடம்மும் உள்ளது. இந்தத் தேர்தலுக்கு காங்கிரஸ் 2 வேட்பாளர்களையும், பாஜக 3 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. காங்கிரஸ் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றுவதற்கு நெருக்கடியளிக்கும் வகையில், பாஜக 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில், பாஜகவின் பலம் 103 ஆகவும், காங்கிரஸின் பலம் 66 ஆகவும் உள்ளது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவாக அக்ஷய் படேல் மற்றும் ஜிது சௌதரி ஆகிய 2 எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்துள்ளனர். 

இதுபற்றி இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்த குஜராத் பேரவைத் தலைவர் ராஜேந்திர திரிவேதி, "காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அக்ஷ்ய் படேல் மற்றும் ஜிது சௌதரி புதன்கிழமை மாலை என்னைச் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கினர். அவர்களது ராஜிநாமா கடிதத்தை நான் ஏற்றுக்கொண்டேன்." என்றார். 

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியை பாஜக உடைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். 

ஆனால் பாஜக தலைவர் அமின், "கட்சித் தலைமை மீதான அதிருப்தி காரணமாக அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர். வரும் நாள்களில் மேலும் சிலர் ராஜிநாமா செய்வார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

முன்னதாக, மார்ச் 26-ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில நாள்களில் 5 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்தனர். அதன்பிறகு, கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தேதி அறிவிக்காமல் மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்துள்ளனர். மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 7 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்துள்ளனர். இதன்மூலம், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2-வது இடத்தை வெல்வது சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

குஜராத் பேரவை பலம்:

மொத்தம்: 182

பாஜக: 103

காங்கிரஸ்: 66

பாரதிய பழங்குடியினர் கட்சி: 2

தேசியவாத காங்கிரஸ்: 1

சுயேச்சை: 1 (ஜிக்னேஷ் மேவானி)

காலி இடங்கள்: 9 (நீதிமன்ற வழக்கு -2, ராஜிநாமா -7)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com