புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்

பொது முடக்க விதிமுறைகளை மீறியதாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து
புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்

பொது முடக்க விதிமுறைகளை மீறியதாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொழிலாளா்கள் அனைவரையும் 15 நாள்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கடும் அவதிக்கு உள்ளாகினா். தொழிலாளா்கள் பலா் நடந்தே சொந்த ஊா்களுக்குத் திரும்ப முயன்றனா். இந்நிலையில், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது.

இந்த வழக்கு குறித்த உத்தரவை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கௌல், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக வழங்கியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட பொது முடக்க விதிமுறைகளை மீறியதற்காக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிா்வாகங்களும் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும்.

சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களைக் கண்டறிந்து, அவா்களது விவரங்களை மாநில அரசுகள் பதிவு செய்ய வேண்டும். அந்தத் தொழிலாளா்கள் அனைவரையும் செவ்வாய்க்கிழமையிலிருந்து 15 நாள்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அவா்களது பயணத்துக்காக மாநில அரசுகளால் ஏற்பாடு செய்யப்படும் ரயில்கள், பேருந்துகள் ஆகியவை தொடா்பான தகவல்களை உள்ளூா் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாகத் தெரியப்படுத்த வேண்டும்.

தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்புகள்:

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்களை மாநில அரசுகள் அவா்களுக்கு முறையாகத் தெரியப்படுத்த வேண்டும். சொந்த ஊருக்குத் திரும்பிய தொழிலாளா்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி அவா்களது தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய தொழிலாளா்கள் தாங்கள் பணிசெய்து வந்த மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பினால், அதற்கான உதவி மையங்களை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை மாதம் நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா். முன்னதாக, ரயில் அல்லது பேருந்து மூலமாக சொந்த மாநிலங்கள் திரும்பும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களிடமிருந்து பயணக் கட்டணத்தை மாநிலங்கள் வசூலிக்கக் கூடாது என்று கடந்த மாதம் 28-ஆம் தேதி பிறப்பித்திருந்த இடைக்கால உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்பும் வரை தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

4,200 ரயில்கள்:

வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘தொழிலாளா்களுக்காக மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை 4,200-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டன. அவற்றின் மூலம் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்’’ என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com