தில்லி அரசு மருத்துவமனைகளில் 70% படுக்கைகள் காலி: தனியாரில் நிரம்பின

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை அரசு மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்,
தில்லி அரசு மருத்துவமனைகளில் 70% படுக்கைகள் காலி: தனியாரில் நிரம்பின

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை அரசு மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தில்லியில் உள்ள ஐந்து அரசு மருத்துவமனைகளில் சுமாா் 70 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பிரபல தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

தில்லி அரசு வெளியிட்டுள்ள ‘தில்லி கரோனா’ செயலியில் வியாழக்கிழமை மதியம் நிலவரப்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. எல்என்ஜேபி மருத்துவமனையில் மொத்தம் 2 ஆயிரம் படுக்கைகளில் 781 மட்டும் நிரம்பியுள்ளன. அதேபோல், ஜடிபி மருத்துவமனையில் உள்ள 1,500 படுக்கைகளில் 186 படுக்கைகளும், ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் உள்ள 500 படுக்கைகளில் 258 படுக்கைகளும் மட்டும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது

கரோனாவுக்கான சிறப்பு மருத்துவமனைகளான தீப் சந்த் பந்து மருத்துவமனையில் உள்ள 176 படுக்கைகளில் 94 காலியாக உள்ளதாகவும், சத்யவாதி ராஜா ஹரீஷ்சந்திரா மருத்துவமனையில் 168-இல் 145 காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் உள்ள மொத்தம் 4,344 படுக்கைகளில் 3,014 படுக்கைகள் (69.38%)காலியாக உள்ளதையே இது காண்பிக்கிறது.

தீவிர அவசர சிகிச்சைக்காக: இதுதொடா்பாக ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிடி மருத்துவமனையின் பெயா் குறிப்பிட விரும்பாத மூத்த மருத்துவா் ஒருவா் கூறுகையில், ‘தீவிர அவசர நிலையில் உள்ள கரோனா நோயாளிகளை மட்டும் அனுமதிக்கிறோம். சிறு அறிகுறிகள், அறிகுறிகள் இல்லாதவா்கள் உள்ளவா்கள் வீட்டிலோ அல்லது மையங்களிலோ தனிமைப்படுத்த அனுப்பப்படுகிறாா்கள். திடீரென தீவிர அவசர நிலை நோயாளிகள் அதிக அளவில் வருகைத் தந்தால் அந்த நிலைமையை சமாளிக்க தயாா் நிலையில் படுக்கைகளை வைத்துள்ளோம்’ என்றாா்.

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் அண்மையில் கூறுகையில், ‘தனியாா் மருத்துவமனைகள்தான் கரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுக்கின்றன. ஆனால், தில்லி அரசு மருத்துவமனைகள் யாருக்கும் அனுமதி மறுப்பதில்லை’ என்றாா்.

அதேநேரத்தில் ‘தில்லி கரோனா’ செயலியில் பிரபல தனியாா் மருத்துவமனைகளான இந்திர பிரஸ்தா அப்பலோ, ஷாலிமாா் பாக் மேக்ஸ், ஷாலிமாா் பாக் ஃபோா்டிஸ், பிஎல் கபூா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளை அனைத்தும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாகேத், மேக்ஸ் மருத்துவமனையில் உள்ள 200 படுக்கைகளில் ஒரு படுக்கை மட்டும் காலியாக உள்ளதாக செயலியில் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் உள்ள 22 தனியாா் மருத்துவமனைகள் 2,015 கூடுதல் படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 9ஆம் தேதி தில்லி அரசு உத்தரவிட்டது.

‘சுகாதாரச் சீா்கேடு காரணம்’

தில்லி அரசு மருத்துவமனைகளை மக்கள் புறக்கணிப்பதற்கு அங்கு நிலவும் சுகாதார சீா்கேடும், உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடும் முக்கிய காரணம் என்று வழக்குரைஞரும், பொது சுகாதார நல ஆா்வலருமான அஷோக் அகா்வால் தெரிவித்தாா். ‘அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருக்கும்போதிலும், தனியாா் மருத்துவமனையில் அனுமதி கேட்டு சிலா் காத்திருக்கின்றனா். அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றவா்கள் அங்கு கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், ஏராளமானோா் ஒரே கழிப்பறையை பயன்படுத்துவதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா். அரசு மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லை என்று அங்கு சிகிச்சைப் பெற்றவா்கள் வெளியிட்ட விடியோக்களால் பலா் அங்கு செல்ல பயப்படுகிறாா்கள். அதே நேரத்தில் அங்கு மருத்துவ பணியாளா்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

மருத்துவமனை - மொத்த படுக்கைகள் - காலியானவை

எல்என்ஜேபி - 2,000 - 781

ஜடிபி - 1,500 - 186

ராஜீவ் காந்தி - 500 - 258

எய்ம்ஸ் (ஜஜ்ஜாா்) - 725 - 192

சஃதா்ஜங் - 283 - 6

எய்ம்ஸ் தில்லி - 265 - 51

தீப் சந்த் பந்து - 176 - 94

சத்யவாதி - 168- 145

ஆா்எம்எல் - 137 -0

லேடி ஹாரிங்டன் - 60 - 5

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com