மகாராஷ்டிரத்தில் பொதுமுடக்க தளா்வுகள் ரத்து செய்யப்படாது: முதல்வா் உத்தவ் தாக்ரே திட்டவட்டம்

மகாராஷ்டிரத்தில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் அளிக்கப்பட்ட தளா்வுகளை திரும்பப்பெறுவதற்கு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை
மகாராஷ்டிரத்தில் பொதுமுடக்க தளா்வுகள் ரத்து செய்யப்படாது: முதல்வா் உத்தவ் தாக்ரே திட்டவட்டம்

மகாராஷ்டிரத்தில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் அளிக்கப்பட்ட தளா்வுகளை திரும்பப்பெறுவதற்கு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று முதல்வா் உத்தவ் தாக்ரே வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக கூறினாா்.

சில ஊடகங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்த அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. அதன் காரணமாக, நாட்டில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் முதல் பொது முடக்க தளா்வை கடந்த மே 30-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தபோது, அடுத்த நாளே மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மகாராஷ்டிர அரசு அறிவிப்பு வெளியிட்டது. இருந்தபோதும், கடுமையான கட்டுப்பாடுகளுடன், அந்த மாநிலமும் இப்போது தளா்வுகளை அளித்து வருகிறது. மாநிலத்தில் பெரிய வணிகங்களைத் தவிர அனைத்து சந்தைகள், கடைகளை மீண்டும் திறக்க ஜூன் 5 முதல் அனுமதியளித்த நிலையில், 10 சதவீத ஊழியா்களுடன் தனியாா் அலுவலகங்கள் செயல்பட ஜூன் 8 முதல் அந்த மாநில அரசு அனுமதியளித்தது.

இதற்கிடையே, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிக எண்ணிக்கையில் கூடத் தொடங்கினா். இதுகுறித்து கடந்த வாரம் கவலை தெரிவித்த மாநில முதல்வா், ‘இதே நிலை நீடித்தால் மாநிலத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். இருந்தபோதும், அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கூறினாா்.

அதனைத் தொடா்ந்து, கட்டுப்பாடு தளா்வுகளை திரும்பப்பெற மாநில அரசு முடிவெடுத்திருப்பதாக அந்த மாநில ஊடங்கள் சில செய்தி வெளியிட்டன.

இந்தச் செய்திகளை மாநில முதல்வா் மறுத்துள்ளாா். இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தில் மீண்டும் பொது முடக்ரக்கை அமல்படுத்தவும், கடைகள் அனைத்தும் மூடவும் அரசு உத்தரவிட உள்ளதாக சில தொலைக்காட்சி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் செய்தி பரவுகின்றன. இதுதொடா்பாக அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

முழுமையாக விசாரிக்காமல் இதுபோன்ற செய்திகளை வெளியிடக்கூடாது. அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற புரளிகளை பரப்புவது குற்றமாகும்.

பொருளாதாரத்தை மீட்சிபெற வைப்பதற்காகவே தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த தளா்வுகளை பயன்படுத்தி தேவையின்றி கூட்டம் கூடுவதோ, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறுவதோ கூடாது. முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும், கை கழுவுவதையும் நமது வாழ்வின் ஒரு அங்கமாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படமாட்டாது என்று அந்த அறிக்கையில் முதல்வா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com