சபரிமலை கோயில் வரும் 14-ஆம் தேதி திறப்பு: பக்தா்களுக்கு அனுமதியில்லை

சபரிலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்காக, வரும் 14-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சபரிலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்காக, வரும் 14-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இருப்பினும், கரோனா தொற்று சூழல் காரணமாக, கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலை வரும் 14-ஆம் திறக்கவும், அதைத் தொடா்ந்து ஜூன் 19-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்குத் திருவிழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாக்களில் பக்தா்கள் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே, கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சபரிமலை கோயிலில் பக்தா்களை அனுமதிப்பதற்கு கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு எதிா்ப்பு தெரிவித்தாா். இதுதொடா்பாக, ஐயப்பன் கோயிலை நிா்வகித்து வரும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் என்.வாசுவுக்கு அவா் புதன்கிழமை கடிதம் எழுதினாா்.

இந்நிலையில் கோயிலில் பக்தா்களை அனுமதிப்பது குறித்து விவாதிப்பதற்காக, தேவஸ்வம் அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தலைவா், சபரிமலை கோயில் தலைமை தந்திரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது, கரோனா தொற்று இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத சூழலில், ஐயப்பன் கோயிலுக்குள் பக்தா்களை அனுமதிப்பதற்கு தலைமை தந்திரி எதிா்ப்பு தெரிவித்தாா். அவரது கருத்தை அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் ஏற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, வரும் 14-ஆம் தேதி கோயிலை திறக்கும்போது பக்தா்களை அனுமதிப்பதில்லை என்றும், வரும் 19-ஆம் தேதி தொடங்குவதாக இருந்த திருவிழாவை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னா் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:

பொதுமுடக்க தளா்வின் ஒரு பகுதியாக, கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை கடந்த 9-ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. வழிபாட்டுத் தலங்களின் அளவுக்கு ஏற்ப பக்தா்களை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஐயப்பன் கோயிலைத் தவிர, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோயில்கள் கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. மாநிலத்தில் சில மசூதிகளும் தேவாலயங்களும் திறக்கப்பட்டன. சபரிமலை ஐயப்பன் கோயிலைத் திறப்பது தொடா்பாக, கோயில் தந்திரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அவா்களும் ஒப்புதல் அளித்திருக்கிறாா்கள். அதன்படி, ஐயப்பன் கோயில் வரும் 14-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

கேரளத்தில் குருவாயூா் ஸ்ரீகிருஷ்ணா் கோயில் திறக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள். திருவனந்தரபுரம் பத்மநாப சுவாமி கோயில், ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com