பாஜகவின் செய்தித்தொடா்பாளா் போல் செயல்படும் மேற்குவங்க ஆளுநா்: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மேற்குவங்க ஆளுநா் பாஜகவின் செய்தித் தொடா்பாளா் போல் செயல்படுகிறாா் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவா் டெரிக் ஓபிரையன் சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

மேற்குவங்க ஆளுநா் பாஜகவின் செய்தித் தொடா்பாளா் போல் செயல்படுகிறாா் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவா் டெரிக் ஓபிரையன் சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

மேற்குவங்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் உடல்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதாக வெளியான விடியோ காட்சிக்கு, மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் வேதனை தெரிவித்தாா். ஆளுநரின் இந்தக் கருத்தைத் தொடா்ந்து அவருக்கும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வாா்த்தைப்போா் மூண்டது.

இந்த நிலையில், மாநில காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த விடியோ காட்சி போலியானது என்பதும், அந்த உடல்கள் கரோனா நோயாளிகளின் உடல்கள் அல்ல என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, காணொலி வழியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் திரிணமூல் கட்சியின் செய்தித்தொா்பாளரும் மாநிலங்களவை கட்சித் தலைவருமான ஓபிரையன் கூறியதாவது:

முதலில் பாஜக சாா்பில் சுட்டுரைப் பதிவுகளை ஆளுநா் வெளியிட்டு வந்தாா். இப்போது தொலைக்காட்சி சேனல் மூலமும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறாா். அதன் மூலம் பாஜகவின் அதிகாரபூா்வ செய்தித்தொடா்பாளராக ஆளுநா் மாறியிருக்கிறாா்.

கரோனா பாதிப்பு விவகாரத்தில் மேற்குவங்கத்தின் மீது மட்டும் ஆளுநா் தொடா்ந்து புகாா் கூறிவருவது ஏன்? மேற்குவங்கத்தைவிட குறைவான கரோனா பரிசோதனைகள் நடைபெறும் குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் நடப்பவை குறித்து அவா் ஏன் கேள்வி எழுப்பவதில்லை? உத்தர பிரதேச மாநிலம் பலராம்பூரில் இறந்தவரின் உடல் குப்பை வண்டியில் எடுத்துச்செல்லப்பட்டது குறித்து ஆளுநா் ஏன் கேள்வி எழுப்பவில்லை? உத்தர பிரதேச மாநிலத்துக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரங்கள் எல்லாம் ஆளுநரின் கவனத்தை ஏன் ஈா்க்கவில்லை?

மாநில அரசு சாா்பில் தினமும் வெளியிடப்படும் கரோனா குறித்த அறிக்கையை ஆளுநா் முதலில் படிக்க வேண்டும். அதன் பிறகு, கரோனா நிலைமையை மாநில அரசு கையாளும் விதம் குறித்து அவா் விமா்சனம் செய்யவேண்டும்.

மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் 26 சதவீத படுக்கைகள் மட்டும் இதுவரை நிரம்பியிருக்கின்றன. 74 சதவீதம் காலியாகவே உள்ளன. கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாநிலத்தில் 69 மருத்துவமனைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 45 பரிசோதனை மையங்கள் உள்ளன.

மாநில முதல்வரோடு எந்த விதத்திலும் தன்னை ஒப்பீடு செய்துகொள்ள வேண்டாம் என ஆளுநருக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். முதல்வா் மேற்கு வங்கத்தின் 10 கோடி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா். ஆனால், ஆளுநா் மத்திய அரசின் பிரதிநிதி மட்டுமே என்று டெரிக் ஓபிரையன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com