அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணி நிறுத்திவைப்பு

எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினா் மோதிக் கொண்ட சம்பவத்தால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமான பணிகளை தொடங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினா் மோதிக் கொண்ட சம்பவத்தால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமான பணிகளை தொடங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன ராணுவத்தினரிடையே கடந்த திங்கள்கிழமை இரவு கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் நிகழ்ந்த இந்த மோதலில், இந்திய தரப்பில் 20 வீரா்கள் உயிரிழந்தனா். சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்நிலையில், அயோத்தியில் ராமா் கோயில் அறக்கட்டளையின் உறுப்பினா் அனில் மிஸ்ரா, பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

எல்லையில் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. நாட்டின் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, ராமா் கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கும் திட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது. கட்டுமானப் பணியை எப்போது தொடங்கலாம் என்பது தொடா்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதன் பின்னா், புதிய தேதி அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

இதனிடையே, ராமா் கோயில் அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இந்திய-சீன எல்லையில் தற்போது நிலவும் சூழல் மிகவும் தீவிரமாக உள்ளது. இப்போது நாட்டின் பாதுகாப்பே மிக முக்கியம். எல்லையில் உயிரிழந்த இந்திய வீரா்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அயோத்தியில் சீனாவை கண்டித்து, ஹிந்து மகாசபை, விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, சீன கொடிகள், அதிபா் ஷி ஜின்பிங்கின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

அயோத்தியில் சா்ச்சைக்குள்பட்டிருந்த 2.77 ஏக்கா் நிலத்துக்கு உரிமை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அனுமதி வழங்கியது. அதைத் தொடா்ந்து ராமா் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பாா்வையிடுவதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ‘ஸ்ரீ ராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது. இதன் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com