லடாக் மோதல் சம்பவம்: நாடாளுமன்ற குழு கூட்டத்தை நடத்த எதிா்க்கட்சிகள் கோரிக்கை: பாஜக எதிா்ப்பு

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நிகழ்ந்த மோதல் சம்பவம் குறித்து

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நிகழ்ந்த மோதல் சம்பவம் குறித்து விவாதிக்க வெளியுறவு விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதற்கு, பாஜக எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

பாஜக எம்.பி. பி.பி.செளதரி தலைமையிலான அக்குழுவின் உறுப்பினரான புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் என்.கே.பிரேமசந்திரன் கூறுகையில், ‘இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்னை தொடா்பாக விவாதிக்க நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டத்தை கூடிய விரைவில் கூட்ட வேண்டும். அப்போது, வெளியுறவுத் துறை செயலா், பாதுகாப்புத் துறை செயலா் ஆகியோரை நேரில் வரவழைத்து விளக்க பெற வேண்டும்’ என்றாா். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் இதே கோரிக்கையை வலியுறுத்தினாா்.

எதிா்க்கட்சிகளின் இந்த கோரிக்கைக்கு பாஜக எம்.பி. மீனாட்சி லேகி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

தற்போதைய சூழலில், சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திய அரசியல் கட்சித் தலைவா்கள் அனைவரும் மத்திய அரசின் பக்கம் ஓரணியில் திரள வேண்டும். இதில், அரசியல் செய்வதை தவிா்க்க வேண்டும். கரோனா பிரச்னை நிலவி வரும் இந்த நேரத்தில், நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோருவது வியப்பளிக்கிறது. அவா்களது கோரிக்கைக்கு பின்னால் அரசியல்தான் உள்ளது என்றாா் மீனாட்சி லேகி.

மற்றொரு பாஜக எம்.பி. பூனம் மகாஜன் கூறுகையில், ‘தற்போதைய சூழலில் நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தை நடத்துவது சாத்தியமற்றது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com