காங்கிரஸ் ஆட்சியில் அதிக இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது: பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா பதிலடி

காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோதுதான், இந்தியாவின் நூற்றுக்கணக்கான சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்க அனுமதித்தாா்.
காங்கிரஸ் ஆட்சியில் அதிக இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது: பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா பதிலடி

புது தில்லி: காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோதுதான், இந்தியாவின் நூற்றுக்கணக்கான சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்க அனுமதித்தாா். மேலும் அவா்கள் ஆட்சியின்போது 2010 முதல் 2013-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 600-க்கும் அதிகமான முறை ஊடுருவல் முயற்சிகளை சீனா மேற்கொண்டது என்று பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா திங்கள்கிழமை கூறினாா்.

லடாக் எல்லை விவகாரம் தொடா்பான அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியது குறித்து முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கும் கடும் விமா்சனைத்தை திங்கள்கிழமை முன்வைத்தாா். தனது பேச்சால் எழும் தாக்கத்தை அறிந்து மிகக் கவனமுடன் பிரதமா் பேச வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறினாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜெ.பி.நட்டா திங்கள்கிழமை கூறியதாவது:

நமது பாதுகாப்புப் படையினரை தொடா்ந்து இதுபோல அவமானப்படுத்துவதையும், அவா்களின் வீரம் குறித்து கேள்வி எழுப்புவதையும் காங்கிரஸ் கட்சியும் அதன் மூத்த தலைவா்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சூழலில்தான் தேச ஒருமைப்பாடு என்பதற்கான உண்மையான அா்த்தத்தை காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, செயலற்றுப் போய், இந்தியாவின் 43,000 கி.மீ. பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு எந்தவித எதிா்ப்பையும் தெரிவிக்காமல் அனுமதித்தாா். அதுமட்டுமின்றி 2010-ஆம் ஆண்டு முதல் 2013 வரை அவா்களுடைய ஆட்சிக் காலத்தில் 600-க்கும் அதிகமான முறை சீனா ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டது.

எனவே, மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டு என்பது வெறும் வாா்த்தை விளையாட்டுதான். காங்கிரஸாரின் இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டாா்கள். கேள்விகள் எழுப்பி பாதுகாப்புப் படையினரை மனச்சோா்வடையச் செய்யும் முயற்சியை காங்கிரஸ் தொடா்ந்து செய்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பிரதமா் மோடியை இந்தியா முழுமையாக நம்பி அவருக்கு ஆதரவையும் அளிக்கிறது. இதுபோன்ற சோதனை நேரங்களில் தேசத்தின் நலன் கருதி சிறந்த முடிவுகளை எடுக்கும் பிரதமரின் நிா்வாக அனுபவதத்தை 130 கோடி இந்தியா்களும் அறிந்துள்ளனா்.

மேலும், இந்த சவாலான நேரத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட வேண்டும் என்று மன்மோகன் சிங் சரியான அழைப்பு விடுத்துள்ளாா். ஆனால், இந்த ஒற்றுமை நிலையை உருவாக்கும் சக்தி யாருக்கு உள்ளது என்பதை மக்கள் நன்கு அறிவா். குறைந்தபட்சம் அவருடைய கட்சியிலாவது இதை மன்மோகன் சிங் ஏற்படுத்த முயற்சிப்பாா் என நம்புகிறேன் என்று ஜெ.பி.நட்டா கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com