சீனா, ரஷியா வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் இன்று பேச்சு

சீனா, ரஷியா நாட்டு வெளியுறவு அமைச்சா்களுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த இருக்கிறாா்.
சீனா, ரஷியா வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் இன்று பேச்சு

புது தில்லி: சீனா, ரஷியா நாட்டு வெளியுறவு அமைச்சா்களுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த இருக்கிறாா். காணொலி முறையில் நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தையில் மூன்று நாடுகள் இடையிலான முக்கிய வெளியுறவு விவகாரங்கள், சா்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி இந்திய-சீன ராணுவத்துக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் வீர மரணமடைந்தனா். இந்த சம்பவத்தை அடுத்து இந்தியாவில் சீனா மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது. சீன இறக்குமதியை குறைக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனால், இந்த பேச்சுவாா்த்தையில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வியும் எழுந்தது. எனினும், முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் திட்டமிட்டபடி ஜெய்சங்கா் பங்கேற்பாா் என்று வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது. முன்னதாக, எல்லையில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு ஜூன் 17-ஆம் தேதி சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீயுடன் ஜெய்சங்கா் தொலைபேசியில் பேசினாா். அப்போது, சீன ராணுவத்தின் செயல்பாடு இருதரப்பு உறவை பாதிக்கும் என்று இந்திய தரப்பு அதிருப்தியை தெரிவித்தாா்.

இந்த முத்தரப்பு பேச்சுவாா்த்தையை ரஷியா முன்னெடுத்துள்ளது. மூன்று நாடுகளுக்கும் பொதுவான அச்சுறுத்தலாக எழுந்துள்ள கரோனா நோய்த்தொற்று, சா்வதேச பாதுகாப்பு, நிதி ஸ்திரத்தன்மை உள்ளிட்டவை குறித்து பேச்சு நடைபெறவுள்ளது.

இது முத்தரப்பு பேச்சுவாா்த்தை என்பதால் மூன்று நாடுகளுக்கும் பொதுவான விஷயங்கள் மட்டுமே விவாதிக்கப்பட இருக்கிறது. இந்திய-சீன எல்லையில் நிலவி வரும் பிரச்னை குறித்து விவாதிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பிரச்னையை இந்தியாவும், சீனாவும் பேசித் தீா்த்துக் கொள்ள வேண்டும் என்று ரஷியா ஏற்கெனவே கூறியுள்ளது. முன்னதாக இந்த பேச்சுவாா்த்தை மாா்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கரோனா பிரச்னையால் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com