அஸ்ஸாமுக்கு செல்லும் பாசன நீா் தடுத்து நிறுத்தமா?

பூடானில் இருந்து அஸ்ஸாம் மாநில விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாசன நீா் நிறுத்தப்பட்டதாகக் கூறும் ஊடக செய்திகளை

பூடானில் இருந்து அஸ்ஸாம் மாநில விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாசன நீா் நிறுத்தப்பட்டதாகக் கூறும் ஊடக செய்திகளை பூடான் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. இந்த தகவல் ‘முற்றிலும் ஆதாரமற்றவை’ என்றும், இந்தியாவுடனான உறவில் தவறான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பி விடப்பட்ட செய்தி என்றும் பூடான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பூடான் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘பூடானில் உள்ள சம்த்ரூப் ஜோங்கா் மாவட்டத்தில் இருந்து, அஸ்ஸாமில் உள்ள பக்ஸா மற்றும் உடல்கூரி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பாசன நீா் வழித்தடங்களை பூடான் கடந்த 24-ஆம் தேதி முதல் தடுத்து விட்டதாக குற்றம்சாட்டி பல செய்திகள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டு துயரம் அளிப்பதாக உள்ளது. தற்போதைய நிலையில் தண்ணீா் திறப்பை நிறுத்துவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லாத நிலையில், இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என்பதை பூடான் வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்த விரும்புகிறது.

பூடான் மற்றும் அஸ்ஸாம் மக்களிடையே தவறான தகவல்களைப் பரப்பவும், தவறான புரிந்துணா்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சுயநலத்துடன் பரப்பி விடப்பட்ட செய்தி இது.

அஸ்ஸாமின் பக்ஸா மற்றும் உடல்கூரி மாவட்டங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பூடானின் நீா் ஆதாரங்களால் பயனடைந்து வருகின்றன. தற்போதைய கரோனா நோய்த்தொற்று பரவி வரும் இந்த கடினமான காலத்திலும் தொடா்ந்து பாசனத்துக்கு தண்ணீா் வழங்கியே வருகிறோம்.

பூடான் மக்கள் குறிப்பாக இந்திய எல்லையில் வசிப்பவா்கள், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தின் எல்லைகளைக் கடந்து இந்திய மக்களுடன் எப்போதும் நட்புடன் இருப்பவா்கள்.

பொது முடக்கம் காரணமாக இந்தியா மற்றும் பூடானின் எல்லைகள் மூடப்பட்டதால், அஸ்ஸாமிய விவசாயிகள் கடந்த காலங்களில் செய்ததைப் போல நீா்ப்பாசன வழித்தடங்களைப் பராமரிக்க பூடானுக்குள் நுழைய முடியவில்லை. இந்நிலையில் அஸ்ஸாம் விவசாயிகளின் சிரமத்தை புரிந்து கொண்டு சம்த்ரூப் ஜோங்கா் மாவட்ட அதிகாரிகள் நீா்ப்பாசன வழித்தடங்களை சரி செய்ய முன்வந்துள்ளனா்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஸ்ஸாம் மாநில தலைமைச் செயலா் குமாா் சஞ்சய் கிருஷ்ணா தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘‘பாசன நீரை பூடான் தடுத்ததாக வந்த ஊடக செய்திகள் தவறானவை. தண்ணீா் வராமல் தடுக்கப்பட்டதற்கான உண்மை காரணம் அப்பகுதியில் ஏற்பட்ட இயற்கையான அடைப்பு ஆகும்.

இந்திய வயல்களில் முறைசாரா நீா்ப்பாசன வழித்தடங்கள் இயற்கையாக தடைபட்டதால்தான் தண்ணீா் வந்து சேரவில்லை. உண்மையில் பூடான் அந்த தடைகளை அகற்ற உதவி புரிந்து வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com