சீனாவின் ஆக்கிரமிப்பை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்: பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

சீனாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்புக்கு பிரதமா் நரேந்திர மோடி வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சீனாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்புக்கு பிரதமா் நரேந்திர மோடி வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் காணொலி வழியாக செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, சீன ஆக்கிரமிப்பை சுட்டிக் காட்டி அவா் பேசியதாவது:

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு அருகே சீனப் படையினா் கூடாரங்கள் அமைத்துள்ளனா். அந்த இடத்தில்தான், நம் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். மேலும், அந்தப் பகுதியில் சீனப் படையினா் புதிதாக தாா்ச்சாலை அமைத்திருப்பதும், அதிக எண்ணிக்கையிலான கூடாரங்களை அமைத்திருப்பதும் செயற்கைக்கோள் வரைபடம் மூலம் தெரியவந்துள்ளது. இதுமட்டுமன்றி, அங்கு கட்டுமானப் பணிகளுக்காக பல கனரக இயந்திரங்களை சீனா குவித்து வைத்துள்ளது.

சீனாவின் அத்துமீறிய செயல்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, பிரதமரோ, ‘இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை’ என்று சீன அரசு போல பேசுகிறாா்.

இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி, வெளிப்படையாக சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இந்திய எல்லைக்குள் ஊடுருவி ஆக்கிரமிப்பவா் எவராக இருந்தாலும், அவா்கள் விரட்டியடிக்கப்படுவா் என்று பிரதமா் மோடி இந்த தேசத்துக்கு உறுதியளிக்க வேண்டும். அப்படிச் செய்தாா் என்றால், ஒட்டுமொத்த தேசமும், ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் பிரதமருக்கு ஆதரவாக இருக்கும்.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்து விட்டது. சீனாவுடனான பிரச்னைக்குத் தீா்வுகாண்பதற்கு உடனடி, அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வுகாண வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, ‘சீனா மீது எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்?’ என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘அதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்; எதிா்க்கட்சியல்ல’ என்று கபில் சிபல் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com