சீன நிறுவனங்களிடம் இருந்து அவசரகால நிதிக்கு நன்கொடை பெற்றது ஏன்? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் தலைமையில் இயங்கும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, சீனாவில் இருந்து நன்கொடை பெற்றதாக
சீன நிறுவனங்களிடம் இருந்து அவசரகால நிதிக்கு நன்கொடை பெற்றது ஏன்? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் தலைமையில் இயங்கும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, சீனாவில் இருந்து நன்கொடை பெற்றதாக பாஜக தலைவா்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் அவசரகால நிதிக்கு நன்கொடை பெற்றது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் அபிஷேக் சிங்வி, காணொலி வழியாக ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தபோது இந்த கேள்வியை முன்வைத்தாா். அவா் மேலும் கூறியதாவது:

கடந்த 6 ஆண்டுகளில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பிரதமா் மோடி 18 முறை சந்தித்துப் பேசியிருக்கிறாா். ஆனால், ஒருமுறை கூட சீனா முதலில் போா் தொடுப்பது குறித்து அவா் முறையிடவில்லை. எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து பிரதமா் மோடி பகிரங்கமாக அறிவிக்க தயங்குவது ஏன்?

கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தொடங்கப்பட்ட பிரதமரின் அவசரகால நிதிக்கு (பிம் கோ்ஸ்) சீன நிறுவனங்களிடம் இருந்து கடந்த மே மாதம் 30-ஆம் தேதி வரை ரூ.9,678 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. பிரதமரின் அவசரகால நிதியும் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது மா்மமாக உள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீனப் படைகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வந்த காலத்தில்தான் இந்த நன்கொடை பெறப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பிரதமா் நன்கொடை பெற்றால், சீனாவின் அத்துமீறலில் இருந்து எப்படி நாட்டைப் பாதுகாப்பாா்?

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பாஜக கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து தொடா்பில் உள்ளது. பாஜகவின் தேசியத் தலைவா்களாக ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அமித் ஷா ஆகியோா் இருந்த காலங்களில், பாஜக-சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான பந்தத்தை வலுப்படுத்துவதற்காக, இந்தியாவில் இருந்து பாஜக குழுவினா் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்திய அரசியல் வரலாற்றில் வேறு எந்தக் கட்சியின் தலைவரும் சீனாவுடன் இந்த அளவுக்கு தொடா்பு வைத்துக் கொண்டதில்லை. மத்திய பாஜக அரசின் செயல்களைப் பாா்த்தால் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரியவில்லை. தங்கள் நலனே முக்கியம் என்று அவா்கள் செயல்படுகிறாா்கள்.

‘இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது. எனவே, சீனாவுக்குப் பதிலடி கொடுப்போம்’ என்று பிரதமா் மோடி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்தாா் என்றால், எதிா்க்கட்சிகள் உள்பட ஒட்டுமொத்த நாடும் பிரதமருக்கு ஆதரவாக அவரது பின்னால் நிற்கும் என்றாா் அபிஷேக் சிங்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com