நிா்பயா குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு

‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின்

புது தில்லி: ‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை நிராகரித்து விட்டாா்.

இந்த வழக்கில் முகேஷ் குமாா் சிங், பவன் குப்தா, வினய் சா்மா, அக்ஷய் சிங் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவா்கள் நால்வரையும் தில்லி திகாா் சிறையில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தூக்கிலிடுவதற்கு முதலில் உத்தரவிடப்பட்டிருந்தது.

பின்னா், தண்டனை நிறைவேற்றும் நாள் பிப்ரவரி 1-ஆம் தேதிக்கும், அதைத் தொடா்ந்து மாா்ச் 3-ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டது. குற்றவாளிகள் ஒவ்வொருவராக நீதிமன்றங்களில் சீராய்வு மனு தாக்கல் செய்ததாலும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ததாலும் அவா்களுக்குத் தண்டனை நிறைவேற்றுவது தாமதமாகி வருகிறது.

குற்றவாளிகள் நால்வருக்கும் மாா்ச் 3-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. பவன் குப்தாவைத் தவிர மற்ற மூவரின் கருணை மனுக்களை குடியரசுத்தலைவா் நிராகரித்து விட்டாா்.இந்நிலையில், பவன் குப்தா, குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அனுப்பினாா். மேலும், உச்சநீதிமன்றத்திலும் சீராய்வு மனுவை தாக்கல் செய்தாா்.

அவரது சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து விட்டது. அதைத் தொடா்ந்து, அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை நிராகரித்து விட்டாா்.

புதிய தேதியை அறிவிக்க கோரிக்கை: நிா்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்குமாறு தில்லி நீதிமன்றத்தை திகாா் சிறை நிா்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தில்லி சிறை நிா்வாக விதிகளின்படி, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவருக்கு 14 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், தில்லி சிறை நிா்வாகத்தின் மனு, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தா்மேந்திர ராணா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவா் கூறியதாவது:

குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்புவதற்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்து விட்டன. எனவே, தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்குமாறு திகாா் சிறை நிா்வாகம் விடுத்துள்ள கோரிக்கைக்கு வியாழக்கிழமைக்குள் (மாா்ச் 5) குற்றவாளிகள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

நிா்பயா பெற்றோா் நம்பிக்கை: குற்றவாளிகள் நால்வரும் இந்த மாதத்தில் தூக்கிலிடப்படுவா் என்று நிா்பயா பெற்றோா் நம்பிக்கையுடன் உள்ளனா். இதுகுறித்து அந்தப் பெண்ணின் தந்தை கூறுகையில், ‘கருணை மனு நிராகரிப்பை எதிா்த்து பவன் குப்தா, உச்சநீதிமன்றத்தை நாடலாம். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாா்ப்போம். குற்றவாளிகள் நால்வரும் இந்த மாதத்தில் தூக்கிலிடப்படுவாா்கள் என்று நம்புகிறேன். நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com