கேரள அரசு நெருப்புடன் விளையாடுகிறது: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கேரள மாநிலத்தில் ஆற்றுக்கால் தேவி கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கல் வைக்கும் விழா திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
கேரள அரசு நெருப்புடன் விளையாடுகிறது: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை


திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கேரள மாநிலத்தில் ஆற்றுக்கால் தேவி கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கல் வைக்கும் விழா திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் நடைபெறும் இவ்விழாவில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் கூடுவது வழக்கம் என்பதால், இது பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சில மதத்தினரின் நம்பிக்கையைக் காப்பாற்ற கேரள அரசு நெருப்புடன் விளையாடுகிறது என்று மருத்துவத் துறை நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒரே இடத்தில் ஏராளமானோர் கூடுவதால், கரோனா வைரஸ் பரவுவதற்குக் காரணமாக அமைந்து விடும். உலக அளவில் பல கருத்தரங்கங்கள், நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. டோக்யோவில் நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக் நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் கூட ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடியும் வலியுறுத்தியுள்ளார். ஹோலி கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆனால், இந்த ஆற்றுக்கால் பொங்கல் விழாவை நடத்துவதால் ஏற்படும் ஆபத்தின் விளைவுகளை மாநில அரசு உணரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்து கேரள நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறுகையில், ஆற்றுக்கால் பொங்கல் விழாவால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் ஏராளமான மக்கள் கூடும் இடத்தில், வைரஸ் தொற்றாமல் தடுப்பதாக எவ்வாறு அரசு பொறுப்பேற்க முடியும்? இது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்று எச்சரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com