தனியார் வங்கி டெபாசிட்களை எடுக்க வேண்டாம்: மாநில அரசுகளுக்கு ஆர்பிஐ வேண்டுகோள்

தனியார் வங்கிகளில் உள்ள டெபாசிட்களை திரும்ப எடுக்க வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வேண்டுகோள் விடுத்துள்ளது
தனியார் வங்கி டெபாசிட்களை எடுக்க வேண்டாம்: மாநில அரசுகளுக்கு ஆர்பிஐ வேண்டுகோள்

தனியார் வங்கிகளில் உள்ள டெபாசிட்களை திரும்ப எடுக்க வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் ஆர்பிஐ கடிதம் எழுதியுள்ளது.
 தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கியின் வீழ்ச்சி இந்தியாவில் வங்கித் துறையின் செயல்பாடுகள் குறித்த சந்தேகத்தை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதிலும், தனியார் வங்கிகளில் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
 இந்நிலையில், சில மாநில அரசுகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அமைப்புகள், நிறுவனங்களிடம் தனியார் வங்கியில் உள்ள பணத்தை பொதுத் துறை வங்கிகளுக்கு மாற்றுமாறு கூறியுள்ளதாக தகவல் வெளியானது.
 இதையடுத்து, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் இது தொடர்பாக ஆர்பிஐ கடிதம் எழுதியுள்ளது. அதில், தனியார் வங்கிகளில் இருந்து டெபாசிட்களை எடுப்பதாலும், மாற்றுவதாலும் வங்கித் துறை, நிதித் துறையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்.
 எனவே, தனியார் வங்கிகளில் இருக்கும் டெபாசிட்களை பொதுத் துறை வங்கிகளுக்கு மாற்றும் யோசனையில் மாநில அரசுகள் இருந்தால், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 தனியார் வங்கிகளை நிர்வகிப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் ஆர்பிஐ-க்கு போதிய அதிகாரம் உள்ளது. இதன் மூலம் அவற்றில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு ஆர்பிஐ உத்தரவாதமும் அளிக்கிறது.
 கடந்த காலங்களிலும் பல தனியார் வங்கிகள் வலுவிழந்துள்ளன. அப்போது டெபாசிட்தாரர்களுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை என்று அந்த கடிதத்தில் ஆர்பிஐ கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com