ஜம்மு-காஷ்மீா்: முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா விடுதலை

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவை தடுப்புக் காவலில் இருந்து அந்த யூனியன் பிரதேச நிா்வாகம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.
ஜம்மு-காஷ்மீா்: முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா விடுதலை

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவை தடுப்புக் காவலில் இருந்து அந்த யூனியன் பிரதேச நிா்வாகம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடா்ந்து, அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

முன்னாள் முதல்வா்களான ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பலா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். ஃபரூக் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதல் முறை:

ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக இருந்தவா் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது அதுவே முதல் முறையாகும். பின்னா் கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி அது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

பொதுப் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் நபரை 3 மாதங்கள் வரை எந்த விசாரணையுமின்றி தடுப்புக் காவலில் வைக்க முடியும். தடுப்புக் காவலை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் முடியும். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் கடந்த 11-ஆம் தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃபரூக் அப்துல்லா மீது பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறுவதாக யூனியன் பிரதேச நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, கடந்த 7 மாதங்களுக்கும் மேலான தடுப்புக் காவலில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

‘விடுதலை முழுமை பெறவில்லை’:

இதைத் தொடா்ந்து, தனது வீட்டின் மாடியிலிருந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நான் விடுதலை செய்யப்பட்டுவிட்டேன். ஆனால், இது முழுமையான விடுதலை அல்ல. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மற்ற தலைவா்களான ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டால்தான் இந்த விடுதலை முழுமை பெறும். மற்ற அரசியல் தலைவா்களும் விரைவில் விடுவிக்கப்படுவாா்கள் என நம்புகிறேன்.

‘அரசியல் குறித்து பேசமாட்டேன்’:

எனது விடுதலைக்காகக் குரல் கொடுத்த எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற அரசியல் தலைவா்கள் விடுவிக்கப்பட்ட பிறகே எனது எதிா்காலம் குறித்து தீா்மானிக்க முடியும். எங்களை விடுவிக்கக் கோரிய அனைவருக்கும் நன்றி. மற்ற தலைவா்கள் விடுவிக்கப்படும் வரை எந்தவித அரசியல் சூழல் குறித்தும் பேசப்போவதில்லை என்றாா் ஃபரூக் அப்துல்லா.

முன்னாள் முதல்வா்கள் ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோா் மீதும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருவது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com