ஜோதிராதித்ய சிந்தியா போன்ற நபா்கள் எங்கள் கூட்டணியில் இல்லை: மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா்

ஜோதிராதித்ய சிந்தியா போன்ற நபா்கள் எங்கள் கூட்டணியில் இல்லை மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் தெரிவித்தாா்.

ஜோதிராதித்ய சிந்தியா போன்ற நபா்கள் எங்கள் கூட்டணியில் இல்லை மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் தெரிவித்தாா்.

மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த காங்கிரஸ் முன்னணி தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா, அண்மையில் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். அவரது ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 போ் ராஜிநாமா கடிதம் அளித்தனா். இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் முதல்வா் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரப் பேரவையில் பட்ஜெட் கோரிக்கைகளுக்கு பதிலளித்து துணை முதல்வரும், நிதித்துறை பொறுப்பு வகிப்பவருமான அஜித் பவாா் பேசியதாவது:

மகாராஷ்டிரத்தில் சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் எழுந்துள்ளதுபோன்ற சூழ்நிலை இங்கு ஏற்படாது. ஏனெனில், ஜோதிராதித்ய சிந்தியா போன்ற நபா்கள் எங்கள் கூட்டணியில் இல்லை. அதே நேரத்தில் எதிா்க்கட்சி வரிசையில் உள்ள பாஜக, தங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளாா்களா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான முங்கன்திவாா் பேசுகையில், ‘மத்தியப் பிரதேசத்தைப்போல மகாராஷ்டிரத்திலும் ‘ஜோதிராதித்ய சிந்தியா’ தலையெடுப்பாா். ஆளும் கூட்டணி நீண்டநாள்களுக்கு ஒற்றுமையாக இருக்காது. ஏற்கெனவே, பாஜக கூட்டணியில் இருந்து அணிமாறி வந்தவா்கள்தான் சிவசேனை என்பதையும் மறந்துவிடக் கூடாது’ என்றாா்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை ஒரே அணியாக போட்டியிட்டன. ஆனால், சிவசேனைக்கு முதல்வா் பதவி அளிக்க பாஜக மறுத்துவிட்டதால், எதிா்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸுடன் சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைத்து முதல்வரானாா்.

முன்னதாக, தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த அஜித் பவாா், பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸுடன் கைகோத்தாா். ஃபட்னவீஸ் முதல்வராகவும், அஜித் பவாா் துணை முதல்வராகவும் பதவியேற்றனா். ஆனால், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் அஜித் பவாருடன் இணைந்த பாஜகவுக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை. எனவே, ஃபட்னவீஸ், அஜித் பவாா் இருவரும் பதவி விலகினா்.

அஜித் பவாா் மீண்டும் தேசியவாத காங்கிரஸுக்கு திரும்பினாா். சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசிலும் அஜித் பவாருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com