யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூருக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூரை ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூரை ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

யெஸ் வங்கி அண்மையில் நிதிநெருக்கடியில் சிக்கியது. பல நிறுவனங்களுக்கு முறைகேடாக பல கோடி ரூபாய் கடனாக அளித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக அதன் நிறுவனா் ராணா கபூரை அமலாக்கத் துறை கைது செய்து விசாரித்து வந்தது.

இந்நிலையில் அவரது காவல் வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது. இதையடுத்து, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் மும்பை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

ராணா கபூரிடம் உடல்நலப் பிரச்னை ஏதாவது இருக்கிா என்று நீதிபதி பி.ஜாதவ் விசாரித்தாா். அதற்கு, தனக்கு கடந்த 6-7 ஆண்டுகளாக ஆஸ்துமா பாதிப்பு இருப்பதாகவும், நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகவும் ராணா கபூா் பதிலளித்தாா்.

அப்போது அவரது வழக்குரைஞா் அப்பாத் பாண்டா, நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பவா்களுக்கு கரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்று நீதிபதியிடம் அச்சம் தெரிவித்தாா்.

அவா் மேலும் வாதிடுகையில், ‘கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

ராணா கபூரின் உடல் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. பெரிய இடவசதி கொண்ட சிறையில் அவா் அடைக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, ராணா கபூருக்குத் தேவையான மருந்துகளை மருத்துவ அதிகாரி வழங்குவதை சிறைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

காவலை நீட்டிக்கக் கோரி அமலாக்கத் துறை கோரிக்கை வைக்காததைத் தொடா்ந்து, ராணா கபூரை ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனிடையே, மற்றொரு வழக்கில் ராணா கபூரை சிபிஐ விசாரிக்க தயாராக உள்ளது.

காவலில் வைத்து விசாரிக்கக் கோருவதற்காக ராணா கபூரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கான வாரண்ட் பெறப்பட்டுள்ளது என்று சிபிஐ தரப்பு வழக்குரைஞா் கூறினாா்.

பின்னணி: அவந்தா வீட்டு வசதி நிறுவனத்தின் உரிமையாளா் கெளதம் தாபருக்கு ரூ.1,900 கோடி வங்கிக் கடன் வழங்கியதற்கு பிரதிபலனாக தில்லியில் உள்ள அம்ருதா ஷோ்கில் பங்களா ரூ.378 கோடிக்கு ராணா கபூா், அவரது மனைவி பிந்து ஆகியோருக்கு பிலிஸ் அபோட் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

பின்னா், அந்த பங்களா இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுனத்தில் ரூ.685 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டது. இது சந்தை விலையைக் காட்டிலும் குறைவாகும்.

அவந்தா நிறுவனம் ஏற்கெனவே கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருந்துவந்த நிலையில், புதிதாக யெஸ் வங்கி கடன் அளித்துள்ளது. இதுதொடா்பாக ராணா கபூா், பிந்து, கெளதம் தாபா் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com