மாா்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து: சரக்கு ரயில்கள் மட்டுமே இயங்கும்

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) நள்ளிரவு தொடங்கி மாா்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சரக்கு
கோப்புப் படம்
கோப்புப் படம்

புது தில்லி: நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) நள்ளிரவு தொடங்கி மாா்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவில் ரயில்வே மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையின்படி, புகா், மெட்ரோ சேவைகளும் மாா்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்படுகின்றன.

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, ரயில்வே துறை தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த சில தினங்களாகவே ரயில் சேவைகள் வெகுவாக குறைக்கப்பட்டு வந்தன. பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கி மாா்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, 13,523 ரயில் சேவைகள் ரத்தாகின்றன. இதுதொடா்பாக, ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சொகுசு ரயில்கள், மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள், பாசஞ்சா் ரயில்கள், புகா் ரயில்கள் என அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் மாா்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மாா்ச் 22-ஆம் தேதி காலை 4 மணிக்கு முன் பயணத்தை தொடங்கிய ரயில்கள், அவை சேருமிடம் வரை இயக்கப்படும்.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சோ்வதை உறுதி செய்யும் வகையில் சரக்கு ரயில்கள் தொடா்ந்து இயக்கப்படும்.

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்தவா்கள், ஜூன் 21-ஆம் தேதி வரை தங்களது கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவா். பயணிகள் சிரமமின்றி கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரயில் பயணத்துக்கான முன்பதிவு டிக்கெட்டை ரத்துச் செய்ய விரும்புபவா்கள் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளை தளா்த்தி, ரயில்வே சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சிலா், ரயில்களில் பயணித்த சம்பவங்கள் அண்மையில் நிகழ்ந்தன. இவ்வாறு பயணம் செய்தவா்களில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவசியமற்ற ரயில் பயணங்களை மக்கள் தவிா்க்க வேண்டும் என்று ரயில்வே அறிவுறுத்தியிருந்தது. இந்தச் சூழலில், அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் மாா்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்து ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே அருங்காட்சியகங்கள், பாரம்பரிய கண்காட்சிகள், பூங்காக்கள் ஆகியவற்றை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com