கரோனாவை விரட்ட ஒருங்கிணைந்தது இந்தியா

கரோனா பாதிப்பின் தீவிரத்தை குறைக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியால் ஞாயிற்றுக்கிழமை
சென்னை
சென்னை

புது தில்லி: கரோனா பாதிப்பின் தீவிரத்தை குறைக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியால் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த சுய ஊரடங்குக்கு நாட்டு மக்கள் பேராதரவு அளித்தனர். 

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் வெளியில் செல்லாமல் தங்கள் வீட்டிலேயே இருந்தனர். சந்தைகள், கடைகள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனங்கள் இயக்கமும் இருக்கவில்லை. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவை மட்டும் செயல்பட்டன. 

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் (கொவைட்-19) பல்வேறு நாடுகளுக்கும் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸின் தாக்கத்துக்கு இந்தியாவில் 7 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 360 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

நாட்டில் கரோனாவின் தாக்கத்தை மட்டுப்படுத்தும் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. "கரோனா',  தொடுதல் மூலமாக பரவக் கூடிய வைரஸ் என்பதால், மக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதையும், அவர்களிடையேயான தொடர்புகளை குறைக்கவும் முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்நிலையில், கரோனா சூழல் தொடர்பாக கடந்த 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கரோனா பரவல் தடுப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் மக்கள் சுய ஊரடங்களை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் ஊரடங்கை கடைப்பிடிக்க அவர் கேட்டுக்கொண்டார். 

அதன் பேரில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலாக நாள் முழுவதும் சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடித்தனர். அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்தனர். மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இல்லாமல் போனதால் சாலைகள், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 

அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் அவ்வப்போது சிலர் வெளியில் சென்றனர். அவசியத் தேவைகள் இன்றி வெளியில் நடமாடிய மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்களுக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

மக்கள் தங்கள் வீட்டிலேயே இருக்க வலியுறுத்தி காவல்துறையினர் தங்களது ரோந்து வாகனங்களின் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவுறுத்தினர். 

பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு சூழலை பயன்படுத்தி, பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டன. 

கரவொலி எழுப்பிய மக்கள்: முன்னதாக, கரோனா சூழலில் ஓய்வின்றி கடமையாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், விமானப் பணியாளர்கள் உள்ளிட்டோரை பாராட்டும் வகையில் சுய ஊரடங்கு அன்று மாலை 5 மணியளவில் எழுந்து நின்று கைகளைத் தட்டுமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 

அதற்கு இணங்க, சுய ஊரடங்கின்போது வீட்டிற்குள்ளே இருந்த மக்கள் மாலை 5 மணியளவில் தங்களது வீடுகளுக்கு வெளியே வந்து கரவொலி எழுப்பினர். பலர் பாத்திரங்களைத் தட்டியும், மணிகளைக் கொண்டும் ஓசை எழுப்பி பாராட்டு தெரிவித்தனர். 

சில இடங்களில் மக்கள் தெருக்களில் கூடி அவ்வாறு ஒலியெழுப்பிய நிலையில், பல இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போர் தங்களது வீட்டு மாடம் மற்றும் மாடிகளில் நின்றபடி கரவொலியும், பாத்திரங்களின் ஒலியையும் எழுப்பினர். 

காஷ்மீரில் கட்டாய ஊரடங்கு சூழல்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பகுதியில் மக்களால் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் பகுதியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதைப் போன்று ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அரசு நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், "சுய ஊரடங்கு சூழலாக இருந்தாலும், காஷ்மீரின் முந்தைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அங்கு கண்டிப்பான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புப் படையினர் இன்றி அங்கு தடையுத்தரவுகளை அமல்படுத்த இயலாது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டிப்பான ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அரசு ஊழியர்கள், அவசியத் தேவைக்கான பணியில் இருக்கும் ஊழியர்கள் முறையான அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டனர். சாலைகளில் தடுப்புகளை வைத்தும், இரும்பு வளையங்களைக் கொண்டும் பாதுகாப்புப் படையினர் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்' என்றனர்.


நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து சுயஊரடங்கைக் கடைப்பிடித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிட்டிருந்த பதிவில் கூறியிருந்ததாவது:

கரோனா வைரஸýக்கு எதிரான போரில் மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் வீரர்களே. நீங்கள் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருப்பதன் மூலம் லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியும்.

சமூகத்தில் இருந்து விலகியிருப்பது இதுவே சரியான நேரமாகும். தொடுவது, ரூபாய் நோட்டுகளை பகிர்வது ஆகியவற்றால் கரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக, இணையவழி பரிவர்த்தனைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மக்கள் வீட்டில் இருந்தபடி தங்கள் குடும்பத்தினருடன் உணவருந்துவது, தொலைக்காட்சி பார்ப்பது என மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வேண்டும் என்று அந்தப் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, மாலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில் கூறியிருப்பதாவது: 

கரோனா வைரஸýக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது கரோனாவுக்கு எதிரான நெடிய போராட்டத்தின் தொடக்கமே. இந்த சுய ஊரடங்கைக் கடைப்பிடித்ததன் மூலமாக, எந்தச் சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை நாட்டுமக்கள் உணர்த்தியுள்ளனர் என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com