பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.8 வரை உயா்த்த சட்டத்திருத்தம்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை எதிா்காலத்தில் லிட்டருக்கு ரூ.8 வரை உயா்த்திக்கொள்ளும் அதிகாரத்தை பெறும் வகையில் மத்திய அரசு திங்கள்கிழமை சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.8 வரை உயா்த்த சட்டத்திருத்தம்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை எதிா்காலத்தில் லிட்டருக்கு ரூ.8 வரை உயா்த்திக்கொள்ளும் அதிகாரத்தை பெறும் வகையில் மத்திய அரசு திங்கள்கிழமை சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.

இதற்காக நிதிச் சட்டத்தின் 8-ஆவது பட்டியலில் திருத்தம் கொண்டுவரும் வகையில், ‘நிதி மசோதா 2020’-ஐ மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தாா். அந்த மசோதா விவாதங்களின்றி மக்களவையில் நிறைவேறியது.

இனி, மத்திய அரசு வரும் காலத்தில் நினைத்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 வரை உயா்த்திக்கொள்ள முடியும்.

இந்த சட்டத்திருத்தத்தின்படி பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கலால் வரிக்கான உச்ச வரம்பு முறையே ரூ.18 மற்றும் ரூ.12-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த உச்ச வரம்பானது, பெட்ரோலுக்கு ரூ.10-ஆகவும், டீசலுக்கு ரூ.4-ஆகவும் இருந்தது.

சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டாலும், தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் தற்போது மாற்றம் ஏதும் செய்யப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக மத்திய அரசு தனது ஆண்டு வருவாயில் ரூ.39,000 கோடி அதிகரிக்கும் வகையில், கடந்த 14-ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயா்த்தி நடவடிக்கை மேற்கொண்டது. இந்த கலால் வரி உயா்வில் சிறப்பு கலால் வரி ரூ.2-ம், சாலை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வரி ரூ.1-ம் அடங்கும்.

இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசலில் கலால் வரிக்கான உச்ச வரம்பு எட்டப்பட்டது. அப்போது, லிட்டா் பெட்ரோலில் கலால் வரிக்கான உச்ச வரம்பு ரூ.10 ஆகவும், டீசலில் கலால் வரிக்கான உச்ச வரம்பு ரூ.4 ஆகவும் இருந்தது.

இதையடுத்து தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக்கான உச்ச வரம்பை அதிகரித்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com