தில்லியில் ஊரடங்கு: சொன்னதைச் செய்த கேஜரிவால் அரசு

தில்லியில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்க கேஜரிவால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தில்லியில் ஊரடங்கு: சொன்னதைச் செய்த கேஜரிவால் அரசு


புது தில்லி: தில்லியில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்க கேஜரிவால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக, தில்லியில் தனி நபர் யாருமே உணவில்லாமல் உறங்கக் கூடாது என்பதை அரசு நிச்சயம் உறுதி செய்யும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தார்.

அதன்படி, அரசு சார்பில் உணவு சமைக்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு நேரடியாகக் கொண்டு வந்து வழங்கப்படுகிறது. 

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் தில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எல்லைகள் மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விடியோ இணைப்பு மூலம் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

"இந்தச் சூழலை எதிர்கொள்ள அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வழங்கப்படும். 

கடந்த 40 மணிநேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக புதிதாக யாரும் கண்டறியப்படவில்லை. 30 பேரில் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் பலியாகியுள்ளார். மற்றவர்கள் குணமடைந்துள்ளனர். இந்தப் போராட்டம் மிக நெடியது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் பாதித்தோரின் எண்ணிக்கை கூடலாம்.

வளர்ந்த நாடுகளே கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளத் திணறுகின்றனர். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாளை முடக்கப்படவுள்ளது. தற்போது தில்லியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உங்களது உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஒருவருக்கொருவர் உதவுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துவருவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதுதான் உண்மையான தேசப்பற்று.

ஊரடங்கு மற்றும் முடக்கம் காரணமாக தில்லியில் யாரும் பசியால் உயிரிழக்கக் கூடாது. நகர் முழுவதும் மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது. தங்குமிடங்களை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உணவு விநியோகத்துக்கும் தனியாக ஏற்பாடுகள் செய்யப்படும். யாரும் உணவில்லாமல் உறங்கக் கூடாது என்று நாம் உறுதி ஏற்போம்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருப்பதால் விமானிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வேதனையளிக்கிறது. நாம் மனநிலையை மாற்ற வேண்டும். அவர்களுக்குப் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும். ஆனால், அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால், பாகுபாடு பார்க்கக் கூடாது" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com