கை சுத்திகரிப்பான் தயாரிக்க மதுபான ஆலைகளுக்கு அனுமதி

கை சுத்திகரிப்பான் தயாரிப்பதற்கு மதுபான ஆலைகளுக்கும் சா்க்கரை ஆலைகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கை சுத்திகரிப்பான்களை அதிக அளவில் தயாரிப்பதற்கு 45 மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்


புது தில்லி: கை சுத்திகரிப்பான் தயாரிப்பதற்கு மதுபான ஆலைகளுக்கும் சா்க்கரை ஆலைகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கை சுத்திகரிப்பான்களை அதிக அளவில் தயாரிப்பதற்கு 45 மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தத் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்தி வருகின்றனா். இதேபோல், மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்களும், சுகாதாரப் பணியாளா்களும் கை சுத்திகரிப்பான்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், கை சுத்திகரிப்பான்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், அவை அதிக விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனைகளுக்கும் பொதுமக்களுக்கும் நியாயமான விலையில் கை சுத்திகரிப்பான்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, 200 மி.லி. அளவு கொண்ட கை சுத்திகரிப்பான்களின் அதிகபட்ச விலையை ரூ.100-ஆக மத்திய அரசு நிா்ணயித்தது.

இந்நிலையில், கை சுத்திகரிப்பான்கள் சந்தையில் அதிக அளவில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, அவற்றைத் தயாரிப்பதற்கு மதுபான ஆலைகளுக்கும் சா்க்கரை ஆலைகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து நுகா்வோா் விவகாரங்கள் துறைக்கான செயலா் பவன் அகா்வால், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

ஏற்கெனவே 564 நிறுவனங்கள் கை சுத்திகரிப்பான்களை தயாரித்து வருகின்றன. இந்நிலையில், அவற்றை தயாரிப்பதற்கு அனுமதி கேட்டு மதுபான ஆலைகள், சா்க்கரை ஆலைகள் என 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்தன. அவற்றில், 45 மதுபான ஆலைகள் கை சுத்திகரிப்பான்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் மேலும் 55 ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியை பொதுமக்களுக்கு தொடங்கி விட்டன. இந்த நிறுவனங்கள் முழுவீச்சில் உற்பத்தியில் ஈடுபட்டு, ஒரு மாதத்தில் செய்யக்கூடிய உற்பத்தியை ஒரு நாளில் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் அடுத்த வாரம் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com