ஆளுநா்களிடையே விரைவில் குடியரசுத் தலைவா் உரை

​கரோனா நோய்த் தொற்று சூழல் தொடா்பாக அனைத்து மாநிலங்களின் ஆளுநா்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்களிடையே குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் விரைவில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற இருக்


கரோனா நோய்த் தொற்று சூழல் தொடா்பாக அனைத்து மாநிலங்களின் ஆளுநா்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்களிடையே குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் விரைவில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற இருக்கிறாா்.

அப்போது, கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உதவுமாறு அவா்களிடம் குடியரசுத்தலைவா் வலியுறுத்தவுள்ளாா் என்று அரசு உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அரசமைப்புச் சட்டப் பதவி வகிக்கும் ஆளுநா்களை கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பங்கெடுக்கச் செய்யுமாறு அறிவுறுத்துவதன் மூலம், மருத்துவ ரீதியிலான இந்த அவசரகாலத்தில் மத்திய அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவே பாா்க்கப்படுகிறது.

முன்னதாக கரோனா சூழல் தொடா்பாக மாநில முதல்வா்கள், தொழிலதிபா்கள், மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், மருந்து தயாரிப்புத் துறை பிரதிநிதிகள், ஊடகத் துறையின் மூத்த பத்திரிகையாளா்கள் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி உரையாடியிருந்தாா்.

அதேபோல், 21 நாள் தேசிய ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படுவது, அந்தக் காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பது ஆகியவற்றை உறுதி செய்வது தொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலா்களுடன் பிரதமரின் முதன்மைச் செயலா் பி.கே. மிஸ்ரா, அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா, மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா ஆகியோா் காணொலிக் காட்சி வழியாக ஆலோசனை நடத்தினா்.

இத்தகைய சூழலில் ஆளுநா்கள் மற்றும் துணைநிலை ஆளுநா்களிடையே குடியரசுத்தலைவா் உரையாற்ற இருப்பது குறிப்பிடத்தக்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com