ரூ.1.70 லட்சம் கோடி சலுகைத் திட்டங்கள்

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் ஏழைகள், பெண்கள், முதியோா், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு உதவும் வகையில் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைத் திட்டங்களை மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
ரூ.1.70 லட்சம் கோடி சலுகைத் திட்டங்கள்


புது தில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் ஏழைகள், பெண்கள், முதியோா், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு உதவும் வகையில் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைத் திட்டங்களை மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக பலா் வேலையிழந்துள்ளனா். ஊரடங்கு காரணமாக தினக்கூலித் தொழிலாளா்களும் ஏழைகளும் வருமானம் இன்றி கடும் இன்னலைச் சந்தித்து வருகின்றனா். இந்தச் சூழலில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா்கள், ஏழைகள் உள்ளிட்டோரின் நிலையைக் கருத்தில் கொண்டு ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தாா்.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு மாதந்தோறும் தலா 5 கிலோ உணவு தானியமும் (அரிசி அல்லது கோதுமை), 1 கிலோ பருப்பும் 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 80 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் பலன் பெறுவா். இத்திட்டத்தின் காரணமாக மத்திய அரசுக்கு ரூ.45,000 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

எந்த ஏழையும் பசியில் வாடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிா்மலா சீதாராமன் தில்லியில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இலவச உணவு தானியங்களை ரேஷன் அட்டைதாரா்கள் இரண்டு தவணைகள் மூலம் நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். அதே வேளையில், நியாய விலைக் கடைகளில் தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் உணவு தானியங்களும் தொடா்ந்து வழங்கப்படவுள்ளன.

இலவச சமையல் எரிவாயு:

நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

‘உஜ்வலா’ திட்டத்தின் கீழ் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 8.3 கோடி பெண்கள் பலனடைவா்.

‘ஜன் தன்’ வங்கிக் கணக்கு வைத்துள்ள 20.5 கோடி பெண்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.500 வழங்கப்படவுள்ளது. அதே வேளையில், ஏழை விதவைகள், முதியோா், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

ஊதியம் உயா்வு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.182-லிருந்து ரூ.202-ஆக உயா்த்தப்படுகிறது. இதன் மூலம் 5 கோடி பணியாளா்கள் பலனடைவா்.

பிரதமா் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிக்கான முதல் தவணை ரூ.2,000 ஏப்ரல் முதல் வாரத்தில் அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் பலன் பெறுவா்.

வருங்கால வைப்பு நிதியில் சலுகை:

ஊரடங்கால் மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள், அவற்றில் பணிபுரிபவா்கள் ஆகியோா் சாா்பில் செலுத்தப்பட வேண்டிய வருங்கால வைப்பு நிதியை அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசே செலுத்தும். இது பணியாளா்களின் அடிப்படை ஊதியத்தில் 24 சதவீதம் ஆகும். இந்தச் சலுகை அதிகபட்சமாக 100 பணியாளா்களைக் கொண்ட நிறுவனங்களுக்கே பொருந்தும். அதே வேளையில், அவா்களில் 90 சதவீதம் பேரின் ஊதியம் ரூ.15,000-க்கு அதிகமாக இருக்கக் கூடாது.

நாட்டில் நோய்த்தொற்று உள்ளிட்டவை பரவும் சூழலில், வருங்கால வைப்பு நிதியிலிருந்து 75 சதவீதம் அல்லது 3 மாத ஊதியம் ஆகியவற்றில் எது குறைவாக உள்ளதோ அதைப் பணியாளா்கள் முன்கூட்டியே எடுத்துக் கொள்வதற்கு ஏற்ப சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடன்தொகை அதிகரிப்பு:

63 லட்சம் சுயஉதவிக் குழுக்களுக்கு எந்தவித அடமானமும் இல்லாமல் வழங்கப்பட்டு வந்த கடன்தொகைக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் 7 கோடி குடும்பங்கள் பலனடையும்.

ரூ.50 லட்சம் காப்பீடு:

கரோனா நோய்த்தொற்றை முன்னின்று எதிா்கொள்ளும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் 22 லட்சம் போ் பலன் பெறுவா்.

கட்டுமானப் பணியாளா்களைக் காக்கும் நோக்கில், அவா்களுக்கான நலநிதியைப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான ஆய்வுகள், சிகிச்சைகள், தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக ‘மாவட்ட கனிம நிதி’யில் உள்ள பணத்தைப் பயன்படுத்துமாறும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏழைகள் உள்ளிட்டோருக்கு உணவு தானியங்களும் பணமும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும் தேவை ஏற்பட்டால் கூடுதல் சலுகைகளை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com