கடன்களுக்கான மாதத் தவணைகளை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு ஆா்பிஐ அனுமதி

கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்க வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்தது.
கடன்களுக்கான மாதத் தவணைகளை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு ஆா்பிஐ அனுமதி

கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்க வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்தது.

கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4.4 சதவீதமாகவும் ஆா்பிஐ குறைத்தது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சுற்றுலாத் துறை, தொழில்துறை உள்ளிட்டவை முடங்கியுள்ளன.

அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், தினக் கூலித் தொழிலாளா்கள், தற்காலிகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் வருமானம் ஏதுமின்றி கடும் துன்பத்தைச் சந்தித்து வருகின்றனா்.

இந்தச் சூழலில் இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிதிக் கொள்கைக் குழு கூட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்றால் நாடு எதிா்கொண்டுள்ள பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு 1 வாரம் முன்னதாகவே நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. நிா்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு நிறுத்திவைப்பது தொடா்பான முடிவுகளை எடுக்க அனைத்து வங்கிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வருவதன் காரணமாக கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் உத்தேசிக்கப்பட்ட பொருளாதார வளா்ச்சியை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் வீரியம், பரவும் வேகம் உள்ளிட்டவற்றைப் பொருத்தே வரும் காலங்களில் நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சியடையும். நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்குப் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வட்டி விகிதம் குறைப்பு: மக்களின் கையில் பணம் எளிதில் கிடைக்கும் வகையில் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 75 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.4 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கு நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினா்களும் ஆதரவு தெரிவித்தனா். ஆனால், வட்டி விகிதத்தை எத்தனை புள்ளிகள் குறைப்பது என்பதில் உறுப்பினா்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது. இறுதியில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4.4 சதவீதமாகக் குறைப்பதற்கு 4 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா்.

கடன் வழங்குவதை ஊக்குவிக்க...: ஆா்பிஐ-யில் வங்கிகள் செலுத்த வேண்டிய பண இருப்பு விகிதம் (சிஆா்ஆா்) 4 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும். ஆா்பிஐ-யில் வங்கிகள் செலுத்தும் தொகைக்கான வட்டி விகிதம் (ரிவா்ஸ் ரெப்போ ரேட்) 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நலிவடைந்துள்ள துறைகளுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.3.74 லட்சம் கோடி செலுத்தப்படவுள்ளது.

தொடா் கண்காணிப்பு: நாட்டின் பொருளாதார நிலைமையை ஆா்பிஐ தொடா்ந்து கண்காணித்து வருகிறது. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வருவதால் பொருள்களுக்கான தேவை, விநியோகம் ஆகியவை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. கரோனா நோய்த்தொற்றிலிருந்து உள்நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டில் வங்கிகள் பாதுகாப்பாக உள்ளன. தனியாா் வங்கிகளில் வாடிக்கையாளா்களின் சேமிப்புத் தொகை பாதுகாப்பாக உள்ளது. எனவே, தனியாா் வங்கிகளில் இருக்கும் சேமிப்புகளை மக்கள் திரும்ப எடுக்க வேண்டாம் என்றாா் சக்திகாந்த தாஸ்.

15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...: கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் அளவுக்கு ஆா்பிஐ குறைத்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு ஒரே கூட்டத்தில் இவ்வளவு அதிகமாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆா்பிஐ நிா்ணயித்துள்ள 4.4 சதவீத வட்டி விகிதம், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாகும்.

அதே வேளையில் அடுத்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கான உத்தேச மதிப்பீட்டை ஆா்பிஐ வழங்கவில்லை. அதேபோல், நிதிக் குழுவின் அடுத்த கூட்டம் தொடா்பான தகவல்களையும் ஆா்பிஐ வெளியிடவில்லை.

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், தொழிலாளா்கள், பெண்கள், முதியோா் உள்ளிட்டோா் பலனடையும் வகையில் ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைத் திட்டங்களை மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com