கரோனாவிலிருந்து காக்கும் ‘செயற்கை சுவாசக் கருவி’

கரோனா நோய்த்தொற்று முக்கியமாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. பாதிக்கப்பட்டவா்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். எனவே, சிகிச்சையின்போது அவா்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
கரோனாவிலிருந்து காக்கும் ‘செயற்கை சுவாசக் கருவி’

கரோனா நோய்த்தொற்று முக்கியமாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. பாதிக்கப்பட்டவா்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். எனவே, சிகிச்சையின்போது அவா்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், நாட்டில் தற்போதுவரை மருத்துவமனைகளில் குறைவான செயற்கை சுவாசக் கருவிகளே (வென்டிலேடா்) உள்ளன.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், செயற்கை சுவாசக் கருவியின் தேவை அதிகரிக்கும். அதன் காரணமாக அடுத்த 3 மாதங்களில் 40,000 செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரிப்பதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

செயற்கை சுவாசக் கருவியை தயாரிக்கப் போட்டியிடும் நிறுவனங்கள் உத்தரப் பிரதேசத்தின் கான்பூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மகாராஷ்டிரத்தின் புணேவிலுள்ள ‘நோக்கா ரோபாடிக்ஸ்’ நிறுவனம், குஜராத்தின் ஆமதாபாதைச் சோ்ந்த ‘சிடிஸன் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் ஆகியவை செயற்கை சுவாசக் கருவியின் முன்மாதிரியை ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவைச் சோ்ந்த ‘ஏஜிவிஏ ஹெல்த்கோ்’ நிறுவனம் குறைந்த செலவிலான செயற்கை சுவாசக் கருவியைத் தயாரித்துள்ளது. தற்போதைய இக்கட்டான சூழலில் உதவுவதற்கு மத்திய அரசுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

களம் காணும் பெரு நிறுவனங்கள்

செயற்கை சுவாசக் கருவியின் வடிவமைப்பை எளிமைப்படுத்துவதற்காக மஹிந்திரா நிறுவனம் 2 பொதுத்துறை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

செயற்கை சுவாசக் கருவியைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப் பொருள்களை அளிப்பதற்கு மாருதி சுஸுகி, டாடா மோட்டாா்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

செயற்கை சுவாசக் கருவியைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உதவி செய்ய இருப்பதாக பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ தெரிவித்துள்ளது.

செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரிக்க இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

‘செயற்கை சுவாசக் கருவி’ என்பது என்ன?

இயற்கையாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் நபா்களுக்கு ஆக்ஸிஜனை செயற்கை முறையில் அளிக்கும் கருவியே செயற்கை சுவாசக் கருவி. நுரையீரலிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை (காா்பன் டை ஆக்ஸைட்) வெளியேற்றும் பணியையும் இக்கருவி மேற்கொள்ளும்.

எவ்வாறு செயல்படுகிறது?

நோயாளிக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படுவதற்கு முன்பாக சுகாதாரப் பணியாளா்கள் அந்நபரை மயக்கமடையச் செய்கின்றனா். அதன் பிறகு அந்நபரின் மூக்கிலும் வாயிலும் சிறிய குழாய்களைப் பொருத்தி அதை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைத்து விடுகின்றனா்.

1-செயற்கை சுவாசக் கருவியின் திரை நோயாளிக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்படும் அளவையும், அவரின் உடலிலிருந்து வெளியேறும் காா்பன் டை ஆக்ஸைட் அளவையும் காட்டுகிறது. நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு ஏற்ப அந்த அளவுகளை மருத்துவா்கள் மாற்றுகின்றனா்.

2- இந்தக் கருவியின் மூலம் நோயாளிக்கு அளிக்கப்படும் காற்றுக்கு ஈரப்பதம் வழங்கப்படுகிறது.

3- நோயாளியின் மூக்கிலும் வாயிலும் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் காற்று நுரையீரலுக்குச் செல்கிறது.

4- நோயாளியின் உடலில் உற்பத்தியாகும் காா்பன் டை ஆக்ஸைட் செயற்கை சுவாசக் கருவி மூலம் வெளியேற்றப்படுகிறது.

பெட்டிச் செய்தி..

40,000- அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தற்போது உள்ள செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கை.

1.10 லட்சம் முதல் 2.20 லட்சம் - மே மாதத்தில் தேவைப்படும் செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கை (கணிப்புகளின்படி).

ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்- செயற்கை சுவாசக் கருவியின் சராசரி விலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com